தமிழகம் முழுவதும் 3,000 சட்ட ஆலோசகர்கள்? தனுஷ் நற்பணி இயக்கத்தின் அடுத்த நகர்வு எனத் தகவல்
Dhanush Legal Advisors Plan : தனுஷ் ரசிகர் மன்றம் தற்போது நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவரது அரசியல் பாதையில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சட்டரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், 3000 சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை, அக்டோபர் 30 : நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 3,000 சட்ட ஆலோசகர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தனுஷ் (Dhanush) நற்பனி இயக்கம் சார்பாக 234 தொகுதிகளுக்குமான ஏசி வசதியுடன் கூடிய டியூசன் சென்டர் அமைக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் 3,000 சட்ட ஆலோசகர்கள்?
ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அரசியல் பாதையில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சட்டரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், இந்தச் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 234 தொகுதிகளிலும் இவர்களை நியமித்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் அதிக அளவிலான சட்ட ஆலோசகர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : மாதிரி பத்திரப்பதிவு மையங்கள் எப்படி செயல்படும்? அரசு வெளியிட்ட விரிவான விளக்கம்




இதனால் எதிர்காலத்தில் தனுஷ் நற்பனி இயக்க நிர்வாகிகள் மீதான வழக்குகள், போராட்டங்களின்போது ஏற்படும் சட்டச் சிக்கல்கள், உள்ளூர் அளவிலான பிரச்னைகள் ஆகியவற்றைக் கையாள இவர்கள் உதவக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சமீப காலமாக, தனுஷின் நற்பணி இயக்கம் அடுத்தடுத்து பல நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 15, 2026 அன்று, ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, கொடியும் லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 18, 2026 அன்று நடைபெற்ற மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்ற 3,000க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளுக்கு, தலா 20 கிராம் வெள்ளி விளக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும், 10, பிளஸ் 2 மாணவர்களுக்காக ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் மையங்களை 2027 ஜனவரி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் முக்கியப் பிரமுகர்களை அவர் சந்தித்ததாகவும், புதிய கட்சிக்கான பெயர் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.. ஆனால், இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிக்க : கரூரில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்.. ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மேன்.. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை!
விஜய்யின் பாதையில் தனுஷ்?
தற்போதைய முதல்வர் விஜய்யும், அரசியலுக்கு வருவதற்கு முன்பு தனது ரசிகர் மன்றங்களை ‘விஜய் மக்கள் இயக்கமாக’ மாற்றி, மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். பின்னர் கட்சி தொடங்கி, போட்டியிட்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே வெற்றிபெற்று முதல்வரானார். ரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றுவது, தொகுதிவாரியான கட்டமைப்பை உருவாக்குவது, மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுவது என, அதே பாதையைத் தனுஷும் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தனுஷின் அரசியல் வருகை, சட்ட ஆலோசகர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து, அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.