உலக மல்யுத்தச் சாம்பியன்ஷிப்: உலகச் சாம்பியனான முதல் இந்தியப் பெண் – தங்கம் வென்ற மனிஷா பன்வாலா சாதனை
World Wrestling Championship : உலக மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 59 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
உலக மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 59 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா (Manisha Bhanwala) தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆண்கள், பெண்கள் இருபிரிவையும் சேர்த்து, இந்த சாதனையை படைத்த இரண்டாவது இந்தியர் இவர். இதற்கு முன், கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆண்கள் 66 கிலோ பிரிவில் சுஷில் குமார் உலகச் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச் சாம்பியனான முதல் இந்தியப் பெண்
உலக மல்யுத்தச் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், அமெரிக்க சாம்பியனா அபிகெய்ல் நெட்டை மனிஷா எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் 0 – 6 எனப் பின்தங்கியிருந்த மனிஷா, அசாத்திய மன உறுதியுடன் போராடி, 8 – 6 என்ற கணக்கில் வெற்றியைத் தனதாக்கினார். போட்டி தொடங்கியதுமே நெட் ஆக்ரோஷமாக விளையாடினார். மனிஷாவின் வலது காலைப் பற்றி, அவரைத் தூக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சுமார் 30 விநாடிகள் போராடியும், மேட்டின் விளிம்பு அருகே மனிஷா கீழே வீழ்த்தப்பட்டதால், நெட்டுக்கு 4 புள்ளிகள் கிடைத்தன.
இதையும் படிக்க : IPL 2027: ஐபிஎல் 2027ல் ஹர்திக் வேறு அணிக்கு செல்ல மாட்டாரா..? மும்பை அணியின் திட்டம் இதுதான்!




இந்த முடிவை எதிர்த்து இந்தியத் தரப்பு மறுபரிசீலனை கோரியது. ஆனால், மனிஷா ஆபத்தான நிலையில் வீழ்ந்தது உறுதி செய்யப்பட்டதால், மறுபரிசீலனை தோல்வியடைந்து, நெட்டுக்குக் கூடுதலாக ஒரு புள்ளி வழங்கப்பட்டது . அதன் பிறகு, மனிஷாவுக்கு எச்சரிக்கை விதிக்கப்பட்டதால், நெட்டின் முன்னிலை 6–0 ஆக உயர்ந்தது. முதல் சுற்று முடிவதற்குள், நெட்டை மேட்டுக்கு வெளியே தள்ளி, ஒரு புள்ளியை மட்டுமே மனிஷாவால் பெற முடிந்தது.
இரண்டாம் சுற்றில், புதிய உத்வேகத்துடன் களமிறங்கிய மனிஷா, ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றினார். நெட் மீண்டும் காலைப் பற்ற முயன்றபோது, லாவகமாக அவருக்குப் பின்னால் நகர்ந்த மனிஷா, அவரைக் கீழே வீழ்த்தி 2 புள்ளிகளைப் பெற்றார். இந்த முடிவை எதிர்த்து அமெரிக்கத் தரப்பு மறுபரிசீலனை கோரியது. ஆனால் அது தோல்வியடைந்ததால், மனிஷாவுக்குக் கூடுதலாக ஒரு புள்ளி கிடைத்தது.
தொடர்ந்து, தரையில் இருந்த நெட்டை, கட் ரென்ச் உத்தி மூலம் புரட்டி மேலும் 2 புள்ளிகள் பெற்று, மனிஷா ஆட்டத்தை 6–6 என்ற கணக்கில் சமன் செய்தார் . அந்த நிலையில், விதிமுறைகளின்படி நெட் முன்னிலையில் இருந்தார். ஆனால், ஆட்டம் முழுமையாக மனிஷாவின் கட்டுப்பாட்டுக்கு வந்திருந்தது. மேலும் 2 புள்ளிகளைப் பெற்ற அவர், 8–6 என முன்னிலை பெற்றார்.
இதையும் படிக்க : IPL 2027: மும்பை பேட்டிங் பயிற்சியாளராக உத்தப்பா.. களம் காணும் புதிய பயிற்சிக் குழு!
இந்திய மகளிர் மல்யுத்தத்துக்கு வரலாற்றுத் தொடர்
இந்தத் தொடர், இந்திய மகளிர் மல்யுத்த வரலாற்றில் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. ஒரே உலகச் சாம்பியன்ஷிப் தொடரில், மூன்று இந்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இதுவே முதல் முறை. வியாழக்கிழமை நடந்த இறுதிப் போட்டிகளில், நீலம் சிரோஹி (50 கிலோ), கஜல் தோச்சக் (76 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தனர். ஆனால், இந்தியா தங்கம் இல்லாமல் நாடு திரும்பாது என்பதை மனிஷா உறுதி செய்தார்.