உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உள்பட 6 பேர் பலி
Uttarakhand Helicopter Crash : உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், பத்ரிநாத்திலிருந்து டேராடூன் சென்ற தனியார் ஹெலிகாப்டர், ஜோஷிமட் அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானி உள்பட அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உத்தராகண்ட் (Uttarakhand) மாநிலம் சமோலி மாவட்டத்தில், பத்ரிநாத்திலிருந்து டேராடூன் சென்ற தனியார் ஹெலிகாப்டர், ஜோஷிமட் அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானி உள்பட அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர். அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகச் சமோலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுர்ஜித் சிங் பன்வார் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?
டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்ட ஹெலிகாப்டர், அக்டோபர் 30, 2026 இன்று பிற்பகல் சுமார் 1.14 மணியளவில் பத்ரிநாத்திலிருந்து புறப்பட்டு, டேராடூனில் உள்ள சஹஸ்ரதாரா என்ற பகுதிக்கு சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜோஷிமட் என்ற பள்ளத்தாக்கின் மேல் பறந்துகொண்டிருந்த போது, ஹெலிஹாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : பக்கத்து வீட்டார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு சம்பவம்.. 45 பவுன் நகை- பணம் கொள்ளை.. திருப்பூரில் தாய், மகன் என குடும்பமே கைது!




இந்த நிலையில் பிற்பகல் சுமார் 2.20 மணியளவில், ஜோஷிமட் பகுதியில் உள்ள சாய் கிராமத்துக்கு மேலே, ஜேபி மின் நிலையம் அருகே உள்ள மலைச்சரிவில் ஹெலிகாப்டர் மோதி விழுந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பத்ரிநாத் – ஜோஷிமட் இடையே உள்ள விஷ்ணுபிரயாக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஹெலிகாப்டர் குறித்து பிற்பகல் 2.21 மணிக்கு, ஜோஷிமட் உதவி ஆட்சியர் தகவல் தெரிவித்ததாக, ஜோஷிமட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோகர் கன்யால் தெரிவித்தார். சாய் கிராமத்துக்கு மேலே உள்ள ராணுவ முகாம் அருகே, ஹெலிகாப்டரின் கடைசி இருப்பிடம் காட்டப்பட்டதாக உத்தராகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து, ஜோஷிமட், பாண்டுகேஷ்வர் பகுதிகளைச் சேர்ந்த மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர்) பிற்பகல் 2.24 மணிக்கே சம்பவ இடத்துக்குப் புறப்பட்டனர். காவல்துறை, ராணுவம், இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், ஹெலிகாப்டர் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
விமானி உட்பட 6 பேரும் மரணம்
இந்த விபத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்தின் அனைத்து ஹெலிகாப்டர்களையும் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்துக்கான தகவல் கிடைத்த உடனேயே, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகளைத் தான் நேரடியாகக் கண்காணித்து வருவதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். படுகாயமடைந்தவர்களை உடனடியாக உயர் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்த அவர், பயணிகளின் பாதுகாப்புக்காகப் பிரார்த்திப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், பின்னர் விமானி உள்பட 6 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க : ரசீது, எண்ணெய் விவரங்கள் முக்கியம்… – தீபாவளி இனிப்பு, கார வகைகளை தயாரிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள்
உத்தராகண்டின் பல பகுதிகளில் தற்போது மழையும் பனிப்பொழிவும் நிலவி வரும் சூழலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வியாழக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் பனியால், கேதார்நாத்தில் இந்தப் பருவத்தின் முதல் கனத்த பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மலைப்பகுதி மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என டேராடூன் வானிலை ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் சி.எஸ். தோமர் தெரிவித்துள்ளார். எனினும், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் இதுவரை வெளியாகவில்லை.