”தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்”: மதுரையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உறுதி
Vice President Radhakrishnan Statement : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், குஜராத், கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரதமராகியுள்ளதைப் போல, எதிர்காலத்தில் தமிழர் ஒருவரும் நிச்சயம் இந்தியாவின் பிரதமர் ஆவார் என தெரிவித்துள்ளார்.
மதுரை, அக்டோபர் 30 : குஜராத், கர்நாடகா (Karnataka) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரதமராகியுள்ளதைப் போல, எதிர்காலத்தில் தமிழர் ஒருவரும் நிச்சயம் இந்தியாவின் பிரதமர் ஆவார் எனக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அக்டோபர் 30, 2026 இன்று தமிழகம் வந்தார்.
டெல்லியிலிருந்து தனி விமானத்தில் மதுரை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தேவரின் உறவினர்களையும் சந்தித்துப் பேசினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமம் சென்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். மாலையில் மதுரை திரும்பிய அவர், மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல் ராஜன் தலைமையிலான அறங்காவலர் குழுவினரும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் அவரை வரவேற்று, பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.
இதையும் படிக்க : மீண்டும் மீண்டுமா.. மீனாட்சியம்மன் கோவிலில் திடீர் மின்தடை.. துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது அதிர்ச்சி!




‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’
தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதுரை என்றாலே மீனாட்சி அம்மன்தான் எனக் குறிப்பிட்ட அவர், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை மதுரை மக்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக நடத்தியதாகவும் பாராட்டினார். இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமராக முடியுமா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், தமிழர் மட்டுமின்றி, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் பிரதமராக முடியும். அதற்கு ஜனநாயகம் வழிவகை செய்துள்ளது. கர்நாடகம், குஜராத்தைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமராகியுள்ளதைப் போல, எதிர்காலத்தில் ஒருநாள் தமிழர் ஒருவரும் நிச்சயம் பிரதமர் ஆவார் என்றார்.
உலகின் முதன்மை வல்லரசு நாடாக இந்தியா உருவெடுப்பதை உலகின் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். தற்போது உலகின் நான்காவது வல்லரசாக இருக்கும் இந்தியா, விரைவில் முதலிடத்தை எட்டும் என்றும், உலக மக்கள் அனைவரையும் அரவணைத்து வழிநடத்தும் மகத்தான நாடாக உருவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மூன்று முறை மின்தடை
குடியரசு துணைத் தலைவர் கோயிலுக்குள் சென்றபோது, இரண்டு முறை தலா 10 விநாடிகளுக்கு மின்தடை ஏற்பட்டது. தரிசனம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் மீண்டும் 10 விநாடிகள் மின்தடை ஏற்பட்டதால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. முன்னதாக அக்டோபர் 29, 202நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபோதும் இதேபோல் மின்தடை ஏற்பட்டிருந்தது.
இதையும் படிக்க : பக்கத்து வீட்டார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு சம்பவம்.. 45 பவுன் நகை- பணம் கொள்ளை.. திருப்பூரில் தாய், மகன் என குடும்பமே கைது!
இதுகுறித்து, அக்டோபர் 30, 2026 இன்று காலை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் கேட்டபோது, ஜெனரேட்டர் மூலம் வழங்கப்பட்ட மின்சாரத்திலிருந்து வழக்கமான மின் விநியோகத்துக்குத் திடீரென மாற்றியபோதே தடை ஏற்பட்டதாகவும், இனி அவ்வாறு நிகழாது என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.