குழந்தைகள் கடத்தல் முதல் பெண்கள் பாதுகாப்பு வரை.. தமிழக அரசுக்கு எதிராக கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு! பெப்பர் ஸ்பிரே காட்டி ஆவேசம்!
MP Kanimozhi On CM Vijay: பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய கனிமொழி, இலவசப் பேருந்து பயணம் இருந்தால்கூட பெண்கள் வெளியே வருவதற்குப் பயப்படுவதாகவும், பெண் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்குப் பெற்றோர் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, பெண்களுக்கு அண்ணன் சீர் வழங்குவதைவிட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மேடையில் பெப்பர் ஸ்பிரேவைக் கையில் எடுத்துக் காட்டினார்.
அக்டோபர் 31, 2026: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை, போதைப்பொருள் புழக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக, தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலை அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பெப்பர் ஸ்பிரே வழங்க வேண்டும் எனக் கூறி மேடையிலேயே பெப்பர் ஸ்பிரேவைக் காட்டிப் பேசினார்.
சென்னையில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, மாவட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் வசிக்கும் ஏராளமான வடமாநிலப் பெண்களும் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
விலைவாசி உயர்வைக் கண்டிக்கும் வகையில் அரிசி மூட்டைகள், சமையல் எண்ணெய் கேன்கள் உள்ளிட்ட பொருட்களைக் கையில் ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’, ‘தூக்கத்திலிருந்து எழுந்திருங்கள் முதல்வரே’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தினர்.
குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படும் தலைநகராக தமிழகம் மாறுகிறதா? கனிமொழி கேள்வி!
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழக அரசைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள பெண்கள், தெரியாமல் வாக்களித்துவிட்டோம், தவறான முடிவை எடுத்துவிட்டோம் என ஒவ்வொரு நாளும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களும் இந்த ஆட்சியை நினைத்து வருத்தப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் பெண்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். நிச்சயம் மாற்றம் வரும். விரைவில் மாற்றம் வரும்” என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘நாடா, காடா?’ எனக் கேள்வி எழுப்பிய விஜய், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்ததாகக் குறிப்பிட்ட கனிமொழி, தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், “விஜய் மாமா ஆட்சியில் எத்தனை குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளனர்? பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பாத நிலை ஏன் ஏற்படுகிறது? குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பு வழங்க முடியாத ஆட்சியாக இது இருக்கிறது. குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் தலைநகராகத் தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது என்று பத்திரிகைகள் எழுதுகின்றன” எனக் கடுமையாக விமர்சித்தார்.
பெண்களுக்குப் பெப்பர் ஸ்பிரே கொடுங்கள்!
பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய கனிமொழி, இலவசப் பேருந்து பயணம் இருந்தால்கூட பெண்கள் வெளியே வருவதற்குப் பயப்படுவதாகவும், பெண் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்குப் பெற்றோர் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.
“தமிழகத்தில் ஒவ்வொரு தாயும் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போன்ற அச்சத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் கொடுப்பதைவிட அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் முக்கியம்” என்றார்.
தொடர்ந்து, பெண்களுக்கு அண்ணன் சீர் வழங்குவதைவிட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மேடையில் பெப்பர் ஸ்பிரேவைக் கையில் எடுத்துக் காட்டினார். “பெண்களுக்கு அண்ணன் சீர் வேண்டாம். நியாயவிலைக் கடைகள் மூலமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் பெப்பர் ஸ்பிரே வழங்குங்கள். இந்த பெப்பர் ஸ்பிரேவாவது பெண்களைக் காப்பாற்றட்டும்” எனத் தமிழக முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்தார்.
போதைப்பொருள் கடத்தல், கொலைச் சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டு!
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த விஜய், தனது கட்சியில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிர்வாகிகளை வைத்திருப்பதாக விமர்சித்தார்.
கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் வீட்டில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், “பிளாக் டிக்கெட் மட்டும்தான் வைத்திருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் வேறு எதையோ வைத்திருக்கிறார்கள்” என விமர்சித்தார்.
மேலும், ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் கட்சி நிர்வாகி ஒருவரைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி வழக்கைத் திரும்பப் பெறச் செய்ததாகவும் குற்றம்சாட்டினார். கட்சியில் உள்ள சில நிர்வாகிகள் குட்கா, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தொழிலாகக் கொண்டிருப்பதாகவும் பேசினார்.
ஆட்சிக்கு வந்த பிறகு 700 கொலைகள், 400-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறிய கனிமொழி, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், திமுக நிர்வாகிகளைக் கைது செய்வதிலேயே காவல்துறையினர் கவனம் செலுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரத்திலும் விமர்சனம்!
திமுக நிர்வாகிகளைக் கைது செய்வதில் காவல்துறை தீவிரமாகச் செயல்படுவதாகக் கூறிய கனிமொழி, சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். “திமுக நிர்வாகிகளை விசாரணைக்கு அழைத்து, அவர்களுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்து விசாரணை நடத்துவதற்குக்கூட காவல்துறையினர் தயாராக இருக்கிறார்கள். எங்களைப் பின்னால் சுற்றுவதுதான் காவல்துறையின் முழுநேர வேலையாக உள்ளது. ஆனால் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் கைதிகளைப் பிடிப்பதில் ஏன் அக்கறை காட்டுவதில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலைகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், குற்றவாளிகளைத் தேடிப் பிடிப்பதில் காவல்துறை போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
பி.கே.சேகர்பாபு விமர்சனம் – ‘தார்ப்பாயில் வடிகட்டிய பொய்!’
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழக அமைச்சர்களையும் முதலமைச்சர் விஜய்யையும் விமர்சித்துப் பேசினார்.
அப்போது, “கனிமொழி அவர்களுக்கு ஏழரைச் சனி மீது நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மின்சாரத் துறை அலுவலகத்திற்கு விஜய் சென்ற நாளிலிருந்து மின்சாரம் இல்லை. சிறைச்சாலைக்குச் சென்றார்; அதன்பிறகு சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆவின் அலுவலகத்திற்குச் சென்றார்; தற்போது ஆவின் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது” எனக் கிண்டல் செய்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும் அமைச்சருமான நிர்மல் குமாரை விமர்சித்துப் பேசிய சேகர்பாபு, “தார்ப்பாயில் வடிகட்டிய பொய் சொல்லக்கூடியவர் என்றால் அது நிர்மல் குமார்தான்” எனக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்து, நிர்மல் குமார் ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.