பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி!
Palaniswami And 22 MLAs Shoud Disqualified: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான 22 எம். எல். ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் எஸ்.பி.வேலுமணி.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்த நிலையில் அதிமுகவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ். பி. வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில், எடப்பாடி தலைமையில் 22 எம்எல்ஏக்கள், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள், நேற்று புதன்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக அரசு பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் எஸ். பி. வேலுமணி தலைமையிலான குழு எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்எல்ஏக்கள் குழு எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் மாளிகையில் எடப்பாடி தரப்பினர் புகார் மனு அளித்தனர்.
எடப்பாடி உள்பட 22 பேரை தகுதி நீக்கம் வேண்டும்
இதேபோல, எடப்பாடி கே. பழனிசாமி உட்பட 22 எம்எல்ஏக்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி வேலுமணி தரப்பினர் புகார் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை அளித்த பின்னர், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்பி வேலுமணி தலைமையில் பெரும்பான்மையான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எஸ். பி. வேலுமணி சட்டமன்ற குழு தலைவராகவும், சி விஜயபாஸ்கர் ஆகிய என்னை கொறடாவாக எம்எல்ஏக்கள் தேர்வு செய்து நியமனம் செய்தனர்.




கொறடாவின் உத்தரவை மீறிய 22 எம்எல்ஏக்கள்
நேற்று சட்டப் பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உரிய விதிகளின் அடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு கூறியிருந்தோம். இதில், சுமார் 25 எம்எல்ஏக்கள் கொறடாவின் உத்தரவை ஏற்று வாக்களித்திருந்தனர். ஆனால், 22 எம்எல்ஏக்கள் கொறடாவின் உத்தரவை ஏற்காமல் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். எனவே, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரை எங்கள் அதிமுக குழு சந்தித்தது. அப்போது, தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி கே பழனிசாமி உட்பட 22 எம்எல்ஏக்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தோம்.
பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும்
அதிமுகவில் ஏற்பட்ட மோதல் போக்கில் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தான் சட்ட விதி ஆகும். சட்டமன்ற கட்சி என்பதுதான் செல்லுபடி ஆகும். இதையே நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தி உள்ளன. பெரும்பான்மை மட்டுமே செல்லும். சபாநாயகர் உரிய விதிகளின்படி நல்ல முடிவு எடுப்பார். எடப்பாடி எங்களை நீக்கியது செல்லாது. பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் என்று சி.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – இதுதான் உங்க மாற்றமா? மு.க.ஸ்டாலின் கேள்வி