எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்… எஸ். பி. வேலுமணி தரப்பு அதிரடி அறிக்கை!
SP Velumani Declining Party Post: அதிமுகவில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பதவி வேண்டாம் என்று எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக அவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை எடப்பாடிக்கு அனுப்பி உள்ளனர்.
அதிமுகவில் எஸ். பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இதே போல, அருண்மொழிதேவன் எம்எல்ஏ, கிருஷ்ண முரளி, எஸ். எம். சுகுமார் உள்ளிட்டவருக்கும் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த கட்சி பதவி வேண்டாம் என்று எஸ். பி. வேலுமணி உள்பட 9 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், அதிமுக தலைமையை ஏற்று மீண்டும் செயல்பட தொடங்கிய நிலையில், நாங்கள் வகித்த பதவிகள் தங்களுக்கு ஒதுக்கி தரப்படவில்லை. தங்களின் விருப்பப்படி பதவிகளை வழங்கி உள்ளனர். எனவே, தற்போது அளிக்கப்பட்ட பதவிகள் தங்களுக்கு தேவை இல்லை. அதிமுகவில் அடிமட்ட தொண்டர்களாகவே நாங்கள் செயல்படுகிறோம்.
அதிமுகவுக்கு அடுத்தடுத்து தோல்விகள்
எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக எனும் ஆல விருட்சம் உங்களின் ( எடப்பாடி கே. பழனிசாமி) தவறான முடிவுகளால் கரைந்து வருகிறது. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பி. தங்கமணி, கே.பி. அன்பழகன் கே .சி. வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அருண்மொழி தேவன் எம்எல்ஏ, கிருஷ்ண முரளி, எஸ். எம். சுகுமார் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகிய காரணத்தால் அவர் கையெழுத்து இடவில்லை.
மேலும் படிக்க: அரசு வேலை மோசடி புகார்.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆஜர்!




அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியின் காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். தவெக அரசு பெரும்பான்மை நிரூபித்த சூழ்நிலையில் எடப்பாடி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவர் தலைமையிலும் இரு அணிகள் பிரிந்து செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, எஸ்பி வேலுமணி தலைமையிலான 21 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியுடன் சுமூகமாக செயல்பட தொடங்கினர்.
பதவிகளை மறுப்பதற்கு என்ன காரணம்
இதற்கு முன்னதாக 25 எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் பதவி உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து, எஸ். பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது, தன்னுடன் இருப்பவர்களுக்கு பதவி வழங்காத பட்சத்தில் எனக்கு மட்டும் பதவி வழங்கியிருப்பதை ஏற்க முடியாது என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தங்களுக்கு பதவி வேண்டாம் என்று 9 உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: அதிமுகவில் அடுத்த முக்கிய விக்கெட்.. கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்!