அரசு வேலை மோசடி புகார்.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆஜர்!
புகார்தாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ரூ.23 லட்சம் மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்குத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய போலீசார் முடிவெடுத்தனர். இதற்காக, ஜூலை 1-ஆம் தேதியான இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
சென்னை, ஜூலை 01: போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹23 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார். காவல்துறை சார்பு ஆய்வாளர் சீனிவாசன் என்பவர், சில தினங்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது மகனுக்குப் போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதற்காக, ‘இளஞ்செழியன்’ என்பவரிடம் ரூ.23 லட்சம் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… இடதுசாரிகள் ஷாக் அறிவிப்பு.. இருந்தாலும்…!
பணம் கிடைத்ததாக கூறிய சிவசங்கர்:
மேலும், அந்தப் பணம் கிடைத்தவுடன் அமைச்சர் சிவசங்கரே தனக்குத் தொலைபேசியில் அழைத்து “பணம் வந்துவிட்டது” என்று உறுதிப்படுத்தியதாகவும் சீனிவாசன் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு (FIR) செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், இளஞ்செழியன் என்பவரைச் சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தன்னை அப்போதைய அமைச்சர் சிவசங்கரின் நெருங்கிய உதவியாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.




முன்னாள் அமைச்சரின் மறுப்பு:
கைது நடவடிக்கை மற்றும் எப்.ஐ.ஆர் (FIR) நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்திருந்தார். கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் தனக்கு யாரென்றே தெரியாது என்றும், அவரை தான் நேரில் பார்த்தது கூட இல்லை என்றும், தன் மீது திட்டமிட்டு அவதூறு வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் திட்டவட்டமாக மறுத்திருந்தார். அமைச்சரின் மறுப்பைத் தாண்டி, பாதிக்கப்பட்ட நபர் எஃப்.ஐ.ஆரில் “அமைச்சரை நேரில் சந்தித்தது மற்றும் அவரே போனில் பேசியது” போன்ற ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளதால், தேவைப்பட்டால் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து தனது ரூ.23 லட்சத்தை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு சம்மனும் நேரில் ஆஜரும்:
புகார்தாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ரூ.23 லட்சம் மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்குத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய போலீசார் முடிவெடுத்தனர். இதற்காக, ஜூலை 1-ஆம் தேதியான இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மனை ஏற்று, இன்று சென்னை வேப்பேரியில் உள்ள மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேரில் வந்து ஆஜராகியுள்ளார்.
மேலும் படிக்க: இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!
போலீசார் விசாரணை:
மத்திய குற்றப்பிரிவு உயர் அதிகாரிகள் முன்னிலையில் தற்போது சிவசங்கரிடம் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மோசடி நபருடன் இவருக்கு இருந்த தொடர்பு, புகார்தாரர் கூறும் தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் அவரிடம் கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நிறைவடைந்த பின்னரே இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தெளிவான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.