அதிமுக துணை பொதுச்செயலர் பதவி வேண்டாம்.. எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி!
SP Velumani : அதிமுக துணை பொதுச் செயலர் பதவியை ஏற்க மாட்டேன் என்று அந்தக் கட்சியின் எம்எல்ஏவான எஸ். பி. வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். இது பேசும் பொருளாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி பூசல் வெடித்தது. இதில், எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டனர். மேலும், தமிழக வெற்றிக் கழக கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது எஸ்பி வேலுமணி தரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. மேலும், தமிழக வெற்றி கழக அரசு பெரும்பான்மை நிரூபித்த போது, எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர். இதன் காரணமாக, அவர்களின் கட்சி பதவிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பறித்திருந்தார். ஆனால், எஸ். பி. வேலுமணி தரப்பு எதிர்பார்த்தபடி, தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக இணைந்து செயல்பட தொடங்கினர்.
துணை பொதுச்செயலர் பதவிக்கு எதிராக போர்க்கொடி
அதன்படி, கட்சியில் மீண்டும் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சி பதவிகளை வழங்கி உத்தரவிட்டார். இதில், எஸ். பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு அதிமுக துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், துணை பொது செயலாளர் பதவி வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி போர்க்கொடி தூக்கி உள்ளார்.
மேலும் படிக்க: நீங்கள் மட்டும் தான் கேள்வி கேட்பீர்களா? – செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதம்




மற்றவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை
இது தொடர்பாக கோயம்புத்தூரில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எஸ். பி. வேலுமணி ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் மேற்கண்ட கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், நான் பதவி மட்டும் தான் வேண்டாம் என்று சொல்கிறேன். என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவி வாங்குவதை எனது மனம் ஏற்கவில்லை. என்னுடன் 30 மாவட்ட தலைவர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கும் கட்சியில் பதவி வழங்கப்படவில்லை.
அதிமுகவுக்காக உழைத்தவர்கள்
இப்படி இருக்கும் சூழ்நிலையில், நான் மட்டும் எதன் அடிப்படையில் பதவியே ஏற்றுக்கொள்ள முடியும். எனது பின்னால் நிற்கும் கட்சியினர் கட்சிக்காக பெருமளவில் உழைத்து உள்ளனர். மேலும், தங்கமணி, வீரமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட தலைவர்களின் ஜாம்பவான்கள் ஆவர். கட்சிக்காக நிறைய செலவு செய்து கட்சியை வளர்த்துள்ளனர். இவர்களுக்கு பதவி வழங்கவில்லை என்று எஸ். பி. வேலுமணி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: எடப்பாடி எடுத்த தன்னிச்சையான முடிவு… அதிமுகவிலிருந்து விலகுவதற்கான காரணம் இதுதான்… எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிக்கை