எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!
RB Udhayakumar : தமிழகத்தில் ஜனநாயக திருவிழாவில் எம்எல்ஏக்களை பிடிக்கும் வேலையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சளைக்காமல் ஈடுபட்டு வருவதாக அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் ஜனநாயக திருவிழாவில் எம்எல்ஏக்களை பிடிக்கும் வேலையில் முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருவதாக அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஊதுகின்ற மகுடிக்கு தமிழக மக்கள் மட்டும் மயங்கி கிடக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியை எதிர்த்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் விஜய் ஊதுகிற மகுடிக்கு மயக்கம் அடைந்து வருகின்றனர். இதில், கரூர் தொகுதி எம்எல்ஏ எம். ஆர். விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் ஊதும் மகுடிக்கு மயங்கி போன 6- ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இந்த ஜனநாயக கூத்து எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. இவ்வாறு தொடர்ந்து கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அச்சம் இன்றி அரங்கேறி வருகிற அரசியல் அலங்கோலத்தில் தட்டி கேட்பதற்கு முதல்வர் விஜயின் மகுடிக்கு மயங்கி கிடக்கின்ற தமிழ் சமுதாயத்துக்கு இப்போது வேண்டுமானால் துணிச்சல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இப்படியே காலம் போகும் என்று முதல்வர் விஜய் நினைத்தால் அது மிக மிக தவறாகும்.
எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலையில் சளைக்கவில்லை
வெகு விரைவில் தமிழ் சமூகம் உங்களுக்கு துணிச்சலான முடிவை தருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக திருவிழாவிலே அடுத்தடுத்து ஆள் பிடிக்கும் வேலைகள் முதல்வர் விஜய் சளைக்காமல் சாதித்து வருகிறார். கோவில் திருவிழாவில் பிள்ளை பிடிக்கிறவர்களுக்கும், ஜனநாயக திருவிழாவில் எம்எல்ஏக்களை பிடிப்பவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருந்து வருகிறது. எனவே, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் வகையில் 12 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் தொடர உறுதுணையாக இருப்போம் – திருமாவளவன் திட்டவட்டம்…




தவெகவுக்கு ஆதரவாக வீசும் காற்று
அதுவரை இந்த அரசியல் அலங்கோலங்கள் ஜனநாயக கேலிக்கூத்துக்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். தற்போது, தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு ஆதரவாக காற்று வீசி வருகிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்த பழமொழியை உண்மை வழியாக பலர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காற்று வெகுவிரைவில் திசை மாறும். அப்படி காற்று திசை மாறுகிறபோது, ஜனநாயகத்தின் வலிமை என்ன என்று விஜய்க்கு போது தான் தெரிய வரும்.
விஜயபாஸ்கர் முடிவு நியாயமா தர்மமா
இருந்தாலும், இந்த ஜனநாயக கேலிக்கூத்தை நடத்துகிற ஆணவம் நிச்சயமாக அழிவை தரும் என்பதை சுட்டிக்காட்டி எச்சரிக்கையாக எல்லோரும் இருக்க வேண்டும். கரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ விஜயபாஸ்கர் பொறுமையாக இருந்திருக்க வேண்டாமா. இது நியாயமா தர்மமா என்று கேட்பதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நீங்கள் மட்டும் தான் கேள்வி கேட்பீர்களா? – செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதம்