அதிமுக வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.. நீதிமன்றத்தில் இசக்கி சுப்பையா பதில் மனு!
Isakki Subbiah Files Affidavit : சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில், தனக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையா உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவை மீறி வாக்களித்திருந்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் ஏற்றுக்கொண்டார். இதனை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு நிலுவையில் உள்ள நிலையில் 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன்
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தர்மாதிகாரி, அருள் முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது சொந்த விருப்பத்தின் பேரில், மனப்பூர்வமாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தேன். அதிமுக மீதான நம்பிக்கை இழப்பின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடைந்து 13 நாட்கள் கழித்தே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தேன்.
மேலும் படிக்க: விழுப்புரம் வாகன ஓட்டிகளே உஷார்.. 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அதிரடி அறிவிப்பு!




தவெகவில் குதிரை பேரம் என்பது யூகம்
தனக்கு எதிராக தகுதி நீக்க விசாரணைக்கு சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரிடம் விளக்கம் அளித்துள்ளேன். தமிழக வெற்றிக் கழகத்தில் குதிரை பேரம் என்பது வெறும் யூகமாகும். எனவே, அதிமுக கொறடா அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சத்யபாமா, பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் வாக்களித்திருந்தனர்.
தவெகவில் ஐக்கியமாகி அதிமுக எம்எல்ஏக்கள்
இவர்கள் 4 பேரும் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதேபோல, விராலிமலை தொகுதி எம்எல்ஏவான விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் இணைய உள்ளார். இதேபோல, கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஆவின் பாலில் இனி சலுகை கிடையாது.. லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி திடீரென ரத்து.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!