அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்படலாம்.. முதல்வர் ஜோசப் விஜய்!
IAS And IPS Officers Conference: தமிழகத்தில் அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்படலாம் என்றும், குற்றச்சம்பவங்களில் அரசியல் கட்சியினர் பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஐ. ஏ. எஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று திங்கள் கிழமை ( ஜூன் 29- ஆம் தேதி) தொடங்கியது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பணிபுரியும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். மேலும், அரசியல் தலையீடுகள் ஏதுமின்றி காவல்துறை சுதந்திரமாக செயல்படலாம். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
போதைப் பொருள்கள் ஒழிப்பில் முக்கிய பங்களிப்பு
இதில், ஒவ்வொரு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், தொடர் பணிகள், தொடர் கண்காணிப்பு பணிகள், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆகியவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களை சென்றடையும் வகையில் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். இதனை ஒவ்வொரு மாவட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: இபிஎஸ்-க்கு அடுத்த இடி.. MLA பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..




28 துறைகள் சார்ந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை
இதே போல, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். மேலும், 28 துறைகள் சார்ந்த செயல் திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதேபோல, வெற்றி தமிழகம் தொலைநோக்கு திட்டம் குறித்தும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி இருந்தார். அத்துடன், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாளையும் ஐஏஎஸ்- ஐபிஎஸ் மாநாடு நடைபெறுகிறது
இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளை செவ்வாய்க்கிழமை ( ஜூன் 30-ஆம் தேதி) வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, பிற்பகலில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மதிய உணவு அருந்தினார்.
மேலும் படிக்க: அரசு வேலை மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது எஃப்.ஐ.ஆர்.. சம்மன் அனுப்பிய போலீசார்!!