AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு வேலை மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது எஃப்.ஐ.ஆர்.. சம்மன் அனுப்பிய போலீசார்!!

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தனது தரப்பு விளக்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அதில், "கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் எனது உதவியாளரும் கிடையாது. அரசியல் உள்நோக்கத்தோடு எனது பெயரை இதில் இழுக்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசு வேலை மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது எஃப்.ஐ.ஆர்.. சம்மன் அனுப்பிய போலீசார்!!
முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Jun 2026 11:46 AM IST

சென்னை, ஜுன் 29: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்குத் நேரடித் தொடர்பு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) வெளியாகியுள்ள விவரங்கள் தமிழக அரசியல் மற்றும் அதிகார வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என்று கூறிக்கொண்ட நபர் கைதான நிலையில், தற்போது சிவசங்கரின் பெயரும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தவகையில், சிவசங்கருக்கு போலீசார் முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிக்க: “போதைப்பொருள் இல்லாத தமிழகம்”.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

வழக்கின் தொடக்கம் மற்றும் கைது நடவடிக்கை:

போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கடந்த ஜூன் 24-ஆம் தேதி “இளஞ்செழியன்” என்பவரைக் கைது செய்தனர். அவர் தன்னை அப்போதைய அமைச்சர் சிவசங்கரின் நெருங்கிய உதவியாளர் (PA) என்று அடையாளப்படுத்திக் கொண்டு இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

எஃப்.ஐ.ஆரில் உள்ள பகீர் வாக்குமூலம்:

பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் (SI) சீனிவாசன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ள கள நிலவரங்கள் இதோ, அரசு வேலைக்காகப் பணம் கைமாறிய பிறகு, சந்தேகம் அடைந்த சீனிவாசன் நேரடியாக சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமைச்சர் சிவசங்கரை அவரது அறையிலேயே சந்தித்துள்ளார். அப்போது அமைச்சர் சிவசங்கர், “நீங்கள் கொடுத்த பணம் என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது, கவலைப்பட வேண்டாம் வேலை முடிந்துவிடும்” என்று நேரில் கூறி தனக்கு நம்பிக்கை அளித்ததாக சீனிவாசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செல்போன் உரையாடல்கள்:

அதுமட்டுமன்றி, வேலை தாமதமான போது பலமுறை அமைச்சர் சிவசங்கரே தனது செல்போன் மூலம் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு பேசி, பணத்திற்கு நான் பொறுப்பு என்று கூறி காலம் கடத்தியுள்ளார். கைதான இளஞ்செழியன், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோருக்குத் தனது தாய் மிகவும் நெருக்கமானவர் என்றும், அமைச்சர் சிவசங்கரின் பள்ளி ஆசிரியர் தான் தனது தாய் என்றும் கூறி, தனக்கு அறிவாலயத்திலும், கோட்டையிலும் பலத்த செல்வாக்கு இருப்பதாகக் காட்டி பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் வாதம்:

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தனது தரப்பு விளக்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அதில், “கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் எனது உதவியாளரும் கிடையாது. அரசியல் உள்நோக்கத்தோடு எனது பெயரை இதில் இழுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் மறுப்பைத் தாண்டி, பாதிக்கப்பட்ட நபர் எஃப்.ஐ.ஆரில் “அமைச்சரை நேரில் சந்தித்தது மற்றும் அவரே போனில் பேசியது” போன்ற ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளதால், தேவைப்பட்டால் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து தனது ரூ.23 லட்சத்தை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அதிரடி சம்மன்:

இதைத்தொடர்ந்து, கைதான நபரின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் அமைச்சரின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்களுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை போலீசார் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். புகார்தாரர் நேரடியாக அமைச்சரின் பங்களிப்பைக் குறிப்பிட்டு வாக்குமூலம் அளித்துள்ளதாலும், கைதான இளஞ்செழியனுக்கும் அமைச்சருக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்துத் தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளதாலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிக்க : மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்

சிவசங்கரிடம் விசாரணை எப்போது?

இந்த சம்மனின்படி, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை வேப்பேரியில் உள்ள மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு அவரிடம், கைதான இளஞ்செழியனுடனான தொடர்பு, புகார்தாரர் சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் இவரைச் சந்தித்ததாகக் கூறும் குற்றச்சாட்டு மற்றும் இவர்களது மொபைல் போன் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.

Follow Us