அதிகாரிகள் விதிகளுக்கு உள்பட்டு சுதந்திரமாக செயல்படலாம்… முதல்வர் ஜோசப் விஜய்!
Chief Minister Joseph Vijay : சென்னையில் இரு நாள்களாக நடைபெற்று வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அந்த மாநாட்டில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி பேசி இருந்தார் .
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள், அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவது உள்ளிட்டவை தொடர்பாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் 2 நாட்களாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று திங்கள்கிழமை தொடங்கிய இந்த மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தல் வழங்கி பேசியதாவது: அதிகாரிகள் விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்குவதில் கூடுதல் கவனம்
மேலும், பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற வழக்குகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் தாமதம் இருத்தல் கூடாது. தமிழகத்தில் செயல்படும் காவல் நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்களை மிகுந்த கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கினார்.
மேலும் படிக்க: எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!




அரசு திட்டங்களை பொது மக்களை சென்றடைவதை உறுதி செய்க
மேலும், அரசு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் திறம்பட செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழகத்தில், போதைப்பொருள் கலாச்சாரம், குற்ற சம்பவங்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்டவை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் மாவட்டங்களை நிர்வகிக்கும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டார்.
அரசியல் தலையிடின்றி சுதந்திரமாக செயல்படலாம்
அதன் அடிப்படையில், 2 நாட்கள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அதிகாரிகள் எந்த விதமான அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமாக செயல்படலாம் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஆகிய நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்க : அதிமுக துணை பொதுச்செயலர் பதவி வேண்டாம்.. எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி!