அரியலூர் – புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. விசாரணை வளையத்தில் சார்-பதிவாளர்!
Sub Registrar Office Dvac Raid: புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் சார்- பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு வருகை தரும் பொது மக்களிடம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிலர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. அந்த புகாரின் பேரில், போலீசார் கீழப்பழுவூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆவணங்களை சோதனை செய்த போலீசார்
இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் உள்ளே இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அலுவலகத்தின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றை அதிகாரிகள் பூட்டியதுடன், அலுவலக ஊழியர்களின் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், பதிவு செய்வதற்கு நிலுவையில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க: அதிமுக துணை பொதுச்செயலர் பதவி வேண்டாம்.. எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி!




கணக்கில் வராத ரூ. 41 ஆயிரம் பறிமுதல்
இதில், கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, கீழப்பழுவூர் சார்- பதிவாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் சில அலுவலர்கள், 3 இடைத்தரகர்கள் ஆகியோரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென நடைபெற்ற இந்த அதிரடி சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இங்கும், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம்- ஊழலை ஒழிக்க நடவடிக்கை
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் காரணமாக அரசு துறைகளில் உள்ள ஊழியர்கள் எவரேனும் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில், கணக்கில் வராத சுமார் 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!