தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக வெங்கடராமன் ஐபிஎஸ் நியமனம்!
Fire Rescue Department DGP : தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டிஜிபி ஆக வெங்கடராமன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனராக ஓய்வு பெற்ற சட்டம் ஒழுங்கு முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தீயணைப்புத் துறையின் டிஜிபியாக சீமா அகர்வால் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 30- ஆம் தேதியுடன்) நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜி. வெங்கட்ராமன் ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவில் நியமிக்கப்பட்டிருந்தார்.
தீயணைப்பு துறை டிஜிபி-ஆக வெங்கட்ராமன் நியமனம்
தேர்தலுக்கு பின்னர் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த நிலையில், அவர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தலைமை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஜி. வெங்கட்ராமன் ஐபிஎஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், தீயணைப்பு துறை டிஜிபி- ஆக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக துணை பொதுச்செயலர் பதவி வேண்டாம்.. எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி!




யார் இந்த ஜி.வெங்கட்ராமன் ஐபிஎஸ்
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஜி வெங்கட்ராமன் கடந்த 1968- ஆம் ஆண்டு பிறந்தார். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். மேலும், பெங்களூரு ஐ. ஐ. எம்- இல் பொதுக் கொள்கையில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். கடந்த 1994- ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக சிபிசிஐடி தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவுகளிலும் பணிபுரிந்துள்ளார்.

தீயணைப்பு டிஜிபி நியமன உத்தரவு
காவல் பதக்கம் – ஜனாதிபதி சிறப்புமிக்க சேவை பதக்கம்
மேலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் உடையவர் ஆவார். இவருக்கு கடந்த 2011- ஆம் ஆண்டு புகழ்பெற்ற சேவைக்கான காவல் பதக்கம் மற்றும் கடந்த 2022- ஆம் ஆண்டு ஜனாதிபதியின் சிறப்புமிக்க சேவைக்கான பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டிஜிபியாக இருந்த சீமா அகர்வால் ஐபிஎஸ் பிரிவு உபசார விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இதில், அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்க பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!