அதிமுகவில் அடுத்த முக்கிய விக்கெட்.. கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்!
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூரில் போட்டியிட்டு அவர் தோல்வியைத் தழுவியிருந்தார். இந்நிலையில், தனது விலகலுக்கான காரணங்களாக அவர் முன்வைத்துள்ள முக்கிய குற்றச்சாட்டுகள். தலைமை சுயநலமாக சிந்திப்பதாகவும், கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து தலைமை எவரையும் அழைத்து பேசவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
சென்னை, ஜூலை 01: அதிமுகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், அக்கட்சியின் மற்றொரு முக்கிய விக்கெட்டாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான சில நிமிடங்களிலேயே, இந்த அடுத்த அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது. நாளைய தினம் சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் சென்னையில் தவெகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நாளை தவெகவில் இணைகிறேன், புதிய உத்வேகத்துடன்… – சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு
படிப்படியான அரசியல் வளர்ச்சி:
1980-களிலிருந்து அதிமுகவின் கிளைக்கழகச் செயலாளர், மாவட்ட பேரவை இணைச் செயலாளர், நகரச் செயலாளர் என அடிமட்டத்திலிருந்து படிப்படியாக வளர்ந்தவர் எம்.எஸ்.எம். ஆனந்தன். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விலகலுக்கான காரணங்கள்:
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூரில் போட்டியிட்டு அவர் தோல்வியைத் தழுவியிருந்தார். இந்நிலையில், தனது விலகலுக்கான காரணங்களாக அவர் முன்வைத்துள்ள முக்கிய குற்றச்சாட்டுகள். தலைமை சுயநலமாக சிந்திப்பதாகவும், கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து தலைமை எவரையும் அழைத்து பேசவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தலைமையின் விடாப்பிடியான குணமும், சுயநலப் போக்கும் சாதாரண தொண்டர்களைக் கூட பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
அதோடு, “தண்டனைகளைத் தான் தருவேன் என்று தலைமை சொன்னால், யார்தான் கருணையையும் மன்னிப்பையும் தருவார்கள்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். “அதிமுகவை உயிருக்கும் மேலாக நேசித்தேன், ஆனால் ஒரு துளி விஷம் சேர்ந்தாலும் அது விஷம் தான் என்பது போன்ற சூழல் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ளது” என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த அரசியல் நகர்வு என்ன?
நீண்ட யோசனைக்குப் பிறகு மக்கள் தலைவர்கள் வளர்ந்த இந்த இயக்கத்தில் இருந்து விடைபெறுவதாகக் கூறியுள்ள அவர், இதுவரை தனக்கு ஆதரவளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க : தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… இடதுசாரிகள் ஷாக் அறிவிப்பு.. இருந்தாலும்…!
தற்போது அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்தோ அல்லது தவெக-வில் இணைவது குறித்தோ இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த விபரத்தையும் வெளியிடவில்லை.