பெண்ணைக் கொன்று 3 நாட்கள் உடலுடனேயே தங்கியிருந்த கொலையாளி.. தேனியில் பேரதிர்ச்சி!
Shocking Murder in Theni: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பெண்ணைக் கொலை செய்து உடலைச் சாக்குமூட்டையில் கட்டி வைத்து, 3 நாட்களாக அந்த உடலுடனேயே கொலையாளி தங்கியிருந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டின் துர்நாற்றம் வீசியதை அடுத்து காவல்துறையினர் கதவை உடைத்துச் சோதனையிட்டபோது கொலையாளி பிடிபட்டார்.
தேனி, செப்டம்பர் 12: தேனி நகருக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த லட்சுமி நகர் செல்லும் வழிப்பாதையில், வாடகை வீட்டில் தங்கியிருந்த நபர் ஒருவர் பெண்ணைக் படுகொலை செய்து, அவரது உடலைச் சாக்குமூட்டையில் மூடிவைத்துவிட்டு 3 நாட்களாக அந்த உடலுடனேயே தங்கியிருந்த விபரீத சம்பவம் தற்போது காவல்துறையினரின் அதிரடி சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிக்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!
சடலத்துடன் 3 நாட்கள்:
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் எல்லைக்குட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் புரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வந்த அப்துல் ரகுமான் (38) என்பவர் வாடகைக்குக் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த அம்சவல்லி (38) என்ற பெண்ணை அவர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக அந்தப் பெண்ணின் சடலத்தைச் சாக்குமூட்டையில் போட்டுக் கட்டி வைத்து, வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால், சடலத்தை வெளியே கொண்டு செல்ல முடியாமல் கடந்த மூன்று நாட்களாக அந்த உடலுடனேயே அப்துல் ரகுமான் வீட்டிற்குள் தங்கியிருந்துள்ளார்.
துர்நாற்றத்தால் சிக்கிய குற்றவாளி:
மூன்று நாட்கள் கடந்த நிலையில், பூட்டியிருந்த அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகப் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். வீட்டிற்குள்ளிருந்து எந்தப் பதில்களும் வராததால் கதவை உடைக்க முயற்சி செய்தபோது, உள்ளே இருந்த அப்துல் ரகுமான் கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து வீசிய கடுமையான துர்நாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உள்ளே சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
தொடரும் போலீஸ் விசாரணை:
அப்போது, சாக்குமூட்டையில் சுற்றப்பட்ட நிலையில் அம்சவல்லியின் சடலம் கைபற்றப்பட்டது. உடனடியாகச் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், கொலையாளி அப்துல் ரகுமானைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிசெட்டிபட்டி, லட்சுமி நகர் மற்றும் ஆஞ்சநேயர் நகர் போன்ற பகுதிகள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வரும் முக்கியக் குடியிருப்புப் பகுதியாகும். அமைதியான இந்தப் பகுதியில் பெண்ணைக் கொன்று உடலோடு கொலையாளி 3 நாட்கள் தங்கியிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பரப்பரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சடலம்:
காவல்துறையினர் கைதான அப்துல் ரகுமானிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது, இருவருக்கும் இடையே என்ன தகராறு ஏற்பட்டது என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அம்சவல்லியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள பழனிசெட்டிபட்டி போலீசார், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா அல்லது தற்காலிக ஆத்திரத்தில் ஏற்பட்ட மோதலா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புப் பகுதிக்கு நடுவே நடந்த இந்தச் கொடூர சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர்.