Tamil Nadu Rain Update: இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
Tamil Nadu weather today: தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, செப்டம்பர் 12: தமிழ்நாட்டில் மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
இதையும் படிக்க : அமைச்சரவை மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (செப்.13) மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, நாளை (செப்.14) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, செப்.15ம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் மிதமான மழையும், வரும் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க இன்று முதல் 15ஆம் தேதி வரை மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இதையும் படிக்க : “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.