AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

BRICS 2026: பிரதமர் மோடி – ஷி ஜின்பிங் சந்திப்புக்கு முன் சீனா முக்கிய அறிவிப்பு.. வேறுபாடுகளை சுமூகமாக கையாள உறுதி!!

Modi Xi Meeting: புதுடெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை தரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எல்லைப் பிரச்சினை உட்பட இருநாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை வியூக ரீதியிலும் நீண்டகால நோக்கிலும் சுமூகமாக கையாள தயாராக இருப்பதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

BRICS 2026: பிரதமர் மோடி – ஷி ஜின்பிங் சந்திப்புக்கு முன் சீனா முக்கிய அறிவிப்பு.. வேறுபாடுகளை சுமூகமாக கையாள உறுதி!!
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Sep 2026 08:37 AM IST

இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தலைவர்கள் பங்கேற்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு மிகக் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த உயர்மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இதில் சர்வதேச அளவில் மிகவும் உற்றுநோக்கப்படும் நிகழ்வாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தை அமைந்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவதும், இரு நாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதும் ஆசிய பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய சந்திப்புக்கு முன்னதாக, இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் எல்லைப் பிரச்சினைகளை தூதரக ரீதியிலும் நீண்டகால நோக்கிலும் சுமூகமாக கையாளத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : 18வது பிரிக்ஸ் மாநாடு.. டெல்லி வரும் உலக தலைவர்கள்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

இணையும் இரு பெரும் ஆசிய சக்திகள்:

கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வந்த தூதரக உறவுகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. அதன்பின்னர், இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ரோந்து அமைப்புகளைச் சீரமைப்பது தொடர்பான முக்கிய உடன்பாட்டை எட்டின. கடந்த சில ஆண்டுக் கால இடைவெளியில் இரு தலைவர்களும் கசான் மற்றும் தியான்ஜின் நகரங்களில் நடந்த சர்வதேச கூட்டமைப்புகளில் சந்தித்திருந்தாலும், இந்திய மண்ணில் நடைபெறும் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா மாநாட்டிற்காக ஷி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான இயல்பு நிலையை மீண்டும் கொண்டுவருவதற்கான முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து:

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு குறித்து பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங், இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை முதிர்ச்சியுடன் கையாள வேண்டும் என வலியுறுத்தினார். “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களின் மூலோபாய வழிகாட்டுதலின்படி செயல்பட சீனா தயாராக உள்ளது. இருதரப்பு உறவுகளை வெறும் தற்காலிக அமைப்பாகப் பார்க்காமல், நீண்டகால தொலைநோக்கு மற்றும் வியூக ரீதியிலான கோணத்தில் பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். மேலும், தொடர்புகளைக் கூட்டுவது, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் ஒருவருக்கொருவர் நலம் விரும்பும் நல்லண்டை நாடுகளாகவும் கூட்டாளிகளாகவும் செயல்படுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்று சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

வளர்ந்து வரும் பிரிக்ஸ் கூட்டமைப்பு:

உலகளவில் மாறிவரும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிரிக்ஸ் அமைப்பானது வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் முக்கிய குரலாக மாறியுள்ளது. உலகளாவிய தெற்கு (Global South) நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்வதேச தகராறுகளைத் தீர்ப்பதிலும் பிரிக்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மாவோ நிங் குறிப்பிட்டிருந்தார். 2006-ல் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளை எட்டியுள்ள இந்த கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா போன்ற புதிய நாடுகளும் இணைந்துள்ளன. இந்தச் சூழலில் நடைபெறும் டெல்லி மாநாடு உலக அமைதிக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : BRICS 2026 மாநாட்டுக்கு இந்தியா தயார் – பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ

எல்லை அமைதியும் இருதரப்பு வர்த்தகமும்:

சீன அதிபரின் வருகைக்கு முன்னோடியாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது மற்றும் தூதரகத் தொடர்புகளை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எல்லை சிக்கல்களைத் தாண்டி, இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பது மற்றும் வணிக ரீதியிலான தடைகளை நீக்குவது குறித்து மோடி-ஷி சந்திப்பில் விரிவாகப் பேசப்பட உள்ளது. எனவே, புதுடெல்லியில் நடைபெறும் இந்த வரலாற்று உச்சிமாநாடும் இரு தலைவர்களின் சந்திப்பும் இந்தியா-சீனா உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

Follow Us