ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் ஜூன் 4. 2026 அன்று திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை வெப்பம் கடுமையாக இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே 26 : 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் ஜூன் 4. 2026 அன்று திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை வெப்பம் கடுமையாக இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4, 2026 அன்றும் 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1, 2026 அன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில். 2026 – 2027 கல்வியாண்டிற்கான பள்ளிகள், 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1, 2026 அன்றும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4, 2026 அன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்… பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு!




இதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதியை உறுதி செய்யவும், வெவ்வேறு வகுப்புகளில் பயிலும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே தேதியில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளும் மனுக்களும் பெறப்பட்டன.
மேலும், தற்போது நிலவும் வானிலை மாற்றம் மற்றும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்புகள், மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் பருவமழை ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்ப நிலை என தொடர்ந்து மாறக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பள்ளி வளாகத்தை தயார்படுத்தும் பணிகள் ஆகியவை தொடர்பான பணிகளையும் அரசு ஆய்வு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்துக் காரணங்களை கவனமாகப் பரிசீலித்த பிறகு, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒன்றாக, ஜூன் 4, 2026 வியாழக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாகத் தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்படுவதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.