திருமணமாகாத ஆண் மது அருந்தினால் ரூ.5000 அபராதம் – வினோத கட்டுப்பாட்டு – டிடிவி தினகரன் பாராட்டு
No Alcohol for Unmarried Youth : நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி என்ற கிராமத்தில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
நாகப்பட்டினம் , ஆகஸ்ட் 13 : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி என்ற கிராமத்தில் திருமணமாகாத ஆண்கள் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளது. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுந்தமாவடி என்ற கிராமத்தில் திருமணமாகாத ஆண்கள் மது அருந்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என ஃபிளெக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாத ஆண் மது அருந்தினால் ரூ.5000 அபராதம்
அந்த போர்டில், மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம். நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : தமிழகத்தில் பலத்த காற்றுடன் 2 நாட்களுக்கு கனமழை – எங்கெல்லாம் தெரியுமா?
மேலும், இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்னைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும். இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும் நம் சமூகத்தையும் பாதுகாப்போம் என குறிப்பிட்டிருந்தது.
டிடிவி தினகரன் பாராட்டு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பஞ்சாயத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, மீறி மது அருந்தினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அது குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என ஊர்பொதுமக்கள்… pic.twitter.com/gCJooX448X
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 13, 2026
இது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பஞ்சாயத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, மீறி மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், அது குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2 ஆயிரம் சன்மானமும் வழங்கப்படும் என ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.
இதையும் படிக்க : “அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சிப் பூசல்!”.. இபிஎஸ்-க்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை!!
நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் ‘மதுவை ஒழிப்போம் – மக்களைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன், இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குடும்பங்களின் நலனை உறுதி செய்யவும், மக்களின் பொது அமைதியைப் பேணவும் விழுந்தமாவடி பஞ்சாயத்து மக்கள் தாமாக முன்வந்து தொடங்கியுள்ள இந்த மதுவுக்கு எதிரான பிரசாரம் பாராட்டுக்குரியது.
விழுந்தமாவடியில் தொடங்கியுள்ள இந்த மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவி, மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கும் வலிமையான சமூக இயக்கமாகவும் உருவெடுக்கட்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.