“அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சிப் பூசல்!”.. இபிஎஸ்-க்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை!!
ADMK Crisis Former Ministers Meet: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் மீண்டும் இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். டெல்லி பாஜக தலைமையின் சமரச அறிவுறுத்தலைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உட்கட்சிப் பூசல் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 13: அதிமுக தலைமைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளும் உட்கட்சிப் பூசல்களும் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய முடிவுகள் மற்றும் அணுகுமுறைகளில் அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர்கள், தனியாகக் குழுவாக இணைந்து அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துத் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப் பிளவைச் சரிசெய்து கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் டெல்லி பாஜக தலைமையும் தலையிட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களின் இரகசிய ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
ரகசிய ஆலோசனைக் கூட்டம்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முக்கிய மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், பி. தங்கமணி, கே.பி. அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து நேற்றைய தினம் நள்ளிரவு வேளையில் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை பாலவாக்கத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் இரவு 11 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியுடனான முரண்பாடுகளை எப்படிச் சமரசமாகக் கொண்டு செல்வது, அதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
டெல்லி பாஜக தலைமைக்கு தூது:
உட்கட்சிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர்கள் சமீபத்தில் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தை அணுகி உதவி கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது எஸ்.பி. வேலுமணி தரப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி டெல்லி தலைமை முதலில் இதில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, அதிமுகவில் பிரிந்திருக்கும் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலை டெல்லி பாஜக தலைமை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “யானைகள் தினத்தில் நேர்ந்த நெஞ்சை ரணமாக்கும் துயரம்!”.. ரயில் மோதி தாய், குட்டி யானைகள் பரிதாப பலி!
சமரசத்திற்கு முட்டுக்கட்டை போடும் தலைவர்கள்:
டெல்லி தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே முன்னாள் அமைச்சர்கள் பாலவாக்கம் இல்லத்தில் ஒன்றுகூடிச் சமரச பேச்சுவார்த்தை குறித்து விவாதித்த போதிலும், அதிருப்தியாளர்கள் தரப்பில் முழுமையான உடன்பாடு எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் சமரசம் செய்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்றும், இபிஎஸ்ஸுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் அதிமுகவின் இந்த உள்விவகாரம் மேலும் சிக்கலாகி வருவதோடு, வரும் நாட்களில் தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.