“சென்னையில் 53 கி.மீ தொலைவிற்கு வாட்டர் மெட்ரோ!”.. பக்கிங்காம் கால்வாயில் பிரம்மாண்ட திட்டம்.. மிரட்டல் அறிவிப்பு!
Chennai Water Metro Project: சென்னையில் நெரிசலைக் குறைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 13: சென்னை மாநகரின் அதிவேக வளர்ச்சிக்கும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலுக்கும் தீர்வுகாணும் வகையில், பல்வேறு நவீனப் போக்குவரத்துத் திட்டங்களைச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கேரள மாநிலம் கொச்சியில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் வாட்டர் மெட்ரோ திட்டத்தைப் போல, சென்னையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் கால்வாயைப் பயன்படுத்தி நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தைக் கொண்டுவர மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கும் விதமாகச் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!
சுற்றுச்சூழல் சீரமைப்பு:
இத்திட்டம் வெறும் பயணத்திற்கான போக்குவரத்தோடு நின்றுவிடாமல், பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் மாசடைந்து கிடக்கும் பக்கிங்காம் கால்வாயை முழுமையாகத் தூர்வாரிச் சீரமைப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். கால்வாயின் இருபுறமும் கரைகளைப் பலப்படுத்தித் தூய்மைப்படுத்துவதன் மூலம் சென்னையின் நீர்வழிப் பாதைகள் உயிர் பெறும். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தை நீர் வழியாக இணைப்பது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் என்பதால், இது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பொருளாதாரத்திற்கும் சுற்றுலாத் துறைக்கும் ஒரு புதிய புத்துயிரைக் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.
எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்பின்படி, எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் வாட்டர் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நெப்பியர் பாலம், சோழிங்கநல்லூர் வழியிலான பாதைகள் உட்பட எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை ஒட்டுமொத்த பக்கிங்காம் கால்வாயையும் ஒருங்கிணைத்துச் சுற்றுச்சுழலுக்கு உகந்த படகுப் போக்குவரத்தைக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
எதிர்காலத்துக்கான தொலைநோக்குத் திட்டம்:
சென்னையின் எதிர்காலப் போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் முக்கிய அங்கமாக பக்கிங்காம் கால்வாயைச் சீரமைத்து வாட்டர் மெட்ரோ இயக்குவதும் ஒன்றாகும். தற்காலச் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ஐடி காரிடார் எனப்படும் ஓஎம்ஆர் பகுதிகளை இணைக்கும் விதமாகவும் அமையவுள்ள இந்த வாட்டர் மெட்ரோ திட்டம், சென்னை மக்களின் பயண அனுபவத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
தற்போது கோரப்பட்டுள்ள டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்ததும், தேர்வு செய்யப்படும் நிறுவனம் பக்கிங்காம் கால்வாயின் ஆழம், அகலம், படகு முனையங்கள் அமைப்பதற்கான இடங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் தாக்கம் குறித்து விரிவான கள ஆய்வு நடத்தும். ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட பிறகு, இதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் படகுப் போக்குவரத்துக்கான சோதனைகள் விரைவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.