மதுரையில் சோகம்.. மழலையர் பள்ளி வகுப்பறையில் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம்!
Madurai School Administrator Self Harm : மதுரை மாவட்டத்தில் தனியார் மழலையர் பள்ளியின் பெண் நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இ து தொடர்பாக திருப்பாலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் .
மதுரை மாவட்டம், கண்ணனேந்தல் சந்தனம் நகர் பகுதியை சேர்ந்தவர் முகுந்தன். இவரது மனைவி அஜிதா குமாரி ( 50 வயது). இவர், மழலையர் பள்ளி நடத்தி வருகின்றார். இவர்களுக்கு சுவேதா, கீர்த்தி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில், சுவேதாவுக்கு திருமணம் நடைபெற்று அவரது குடும்பத்துடன் தேனியில் வசித்து வருகிறார். முகுந்தன் இறந்து விட்ட நிலையில், 2- ஆவது மகள் கீர்த்தியுடன், அஜிதா குமாரி தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூத்த மகள் சுவேதாவுக்கு மதுரையில் குழந்தை பிறந்தது. அப்போது, ஸ்வேதா மற்றும் அவரது குழந்தையை, தாய் அஜிதா குமாரி சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவரிடம், மகள் ஸ்வேதா கோபித்துக் கொண்டதாக தெரிகிறது.
மழலையர் பள்ளி வகுப்பறையில் நிர்வாகி தற்கொலை
இந்த விவகாரத்தை தனது தங்கை கீர்த்தியிடம், ஸ்வேதா கூறியுள்ளார். இது தொடர்பாக, தனது தாய் அஜிதா குமாரியிடம், கீர்த்தி கேட்டுள்ளார். இதில், இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கடுமையாக முற்றிய நிலையில் அஜிதா குமாரி கோபித்துக் கொண்டு வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தற்கொலை முடிவை கையில் எடுத்த அஜிதா குமாரி தான் நடத்தி வரும் மழலையர் பள்ளியின் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் படிக்க: ரேஷன் கடைகளின் நேரம் மாறுகிறது? தமிழக அரசு கேட்ட அதிரடி ஆய்வறிக்கை.. விரைவில் அறிவிப்பு!




திருப்பாலை போலீசார் வழக்கப்பதிந்து விசாரணை
வெகு நேரமாகியும் தாய் அஜிதா குமாரியை காணாததால் அவரது இளைய மகள் கீர்த்தி தேடத் தொடங்கினார். அப்போது, பள்ளியின் வகுப்பறை கதவு திறந்து கிடந்த நிலையில், உள்ளே சென்று பார்த்தபோது தாய் எடுத்த விபரீத முடிவு அவருக்கு தெரிய வந்தது. இதை பார்த்து, கீர்த்தி அழுது சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தூக்கில் இருந்து அஜிதாவை மீட்டனர். பின்னர், இது தொடர்பாக அருகில் உள்ள திருப்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கண்ணியேந்தல் பகுதியில் பெரும் சோகம்
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக அஜிதாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் தனியார் பள்ளி நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இனி 2 நாள்கள் வார விடுமுறையா? மதுரை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு பொதுநல வழக்கு.. முழு விவரம் உள்ளே!