சென்னையில் கொடூரம்.. அக்கா வீட்டில் தஞ்சமடைந்த மனைவியை கதவை பூட்டி கழுத்தை அறுத்த கணவன்!
Chennai Murder : சென்னை மாவட்டத்தில் தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கத்தியால் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த கணவரை எம். கே. பி. நகர் போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டம், வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2- ஆவது தெருவை சேர்ந்தவர் சிவா ( 30 வயது). இவர், காசிமேடு துறைமுக பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா ( 23 வயது). தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சிவா மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததன் காரணமாக கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மீன்பிடி தொழிலாளி சிவா வீட்டுக்கு வரும்போது எல்லாம் மது போதையில் வருவதுடன், மனைவி வெண்ணிலாவிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல சிவா மது போதையில் வந்து வெண்ணிலாவிடம் பெரும் தகராறு ஈடுபட்டுள்ளார்.
கணவரிடம் கோபித்துவிட்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி
இதில், கணவர் சிவாவிடம் கோபித்துக் கொண்டு தனது 3 குழந்தைகளுடன் வியாசர்பாடியில் உள்ள தனது தாய் தேவி வீட்டுக்கு வெண்ணிலா சென்று விட்டார். அந்த பகுதியில் மூர்த்திங் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வெண்ணிலா தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று பிற்பகல் வெண்ணிலா அதே குடியிருப்பில் சி- பிளாக்கில் 3- ஆவது மாடியில் வசித்து வரும் தனது அக்காள் மோகனா வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த சிவா தனது மனைவி வெண்ணிலாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: துக்க வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பரிதாப பலி.. புதுச்சேரியில் பெருஞ்சோகம்!




கத்தியால் மனைவியை குத்தி கொலை செய்த கணவர்
இதில், அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த சிவா வீட்டில் காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து வெண்ணிலாவின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த வெண்ணிலா சத்தம் போட்டதால், அவரது தாய் தேவி மற்றும் மக்கள் மோகனா ஆகியோர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். உடனே, அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
பின்னர், அவரது சடலம் உடல்கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக, தாய் தேவி அளித்த புகாரின் பேரில், எம். கே. பி. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெண்ணிலாவின் கணவர் சிவாவை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மனதை ரணமாக்கும் சம்பவம்.. புதுக்கோட்டையில் மகள்கள் கண்முன்னே உயிரிழந்த பெற்றோர்.. லாரி ரூபத்தில் வந்த எமனால் சோகம்!