மனதை ரணமாக்கும் சம்பவம்.. புதுக்கோட்டையில் மகள்கள் கண்முன்னே உயிரிழந்த பெற்றோர்.. லாரி ரூபத்தில் வந்த எமனால் சோகம்!
Pudukkottai Couple Died : புதுக்கோட்டை மாவட்டத்தில் அதி வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியதில் அதில் பயணித்த தம்பதி பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களின் இரு மகள்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
புதுக்கோட்டை மாவட்டம், மேலமுத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி திலக சந்திரா. தம்பதிக்கு தர்ஷிகா மற்றும் நிரஞ்சனா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் நான்கு பேரும் இரு சக்கர வாகனத்தில் சொந்த வேலையாக திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக சதீஷ்குமார் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற சதீஷ்குமார் உள்ளிட்டோர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இரு சக்கர வாகனமும் நசுங்கி சின்னா பின்னமானது.
தம்பதி மீது ஏறி இறங்கிய லாரியின் சக்கரங்கள்
அத்துடன், சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி திலக சந்திரன் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில், அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களது இரு மகள்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் விழுந்து கிடந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக விரைந்து வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: கடலூர்- புதுச்சேரி எல்லையில் ரத்தக்களம்.. நாட்டு வெடிகுண்டு வீசி கார் ஓட்டுநர் கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்!




மகள்கள் கண் முன் உயிரிழந்த பெற்றோர்
அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். எஞ்சிய மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திலக சந்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர்களது இரு மகள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லாரியின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
சாலை விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி திலக சந்திரா ஆகியோரின் சடலங்களை போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், அவரைத் தேடும் பணிகள் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: துக்க வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பரிதாப பலி.. புதுச்சேரியில் பெருஞ்சோகம்!