விசில் அடித்ததால் சர்ச்சை.. நெல்லை மாமன்ற கவுன்சிலர் சஸ்பெண்ட்.. மேயர் அதிரடி உத்தரவு!
Nellai Corporation TVK Member Suspend : திருநெல்வேலி மாநகராட்சியின் 19- ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் விசில் அடித்ததன் காரணமாக அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி மேயர் உத்தரவிட்டுள்ளார். இதனால், கூட்டத்தில் திமுக- தவெகவினர் இடையே வாக்குவாதம் முற்றியது.
திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 10- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமான மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 19- ஆவது வார்டு உறுப்பினர் அல்லா பிச்சை என்பவர் தோளில் தவெக துண்டை அணிந்தவாறும், விசில் அடுத்த படியும் வந்தார். இதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, மாமன்ற கூட்டத்தை கட்சி கூட்டம் போன்று நடத்தக் கூடாது எனவும், மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தனர். இதன் காரணமாக, திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தவெக மாமன்ற உறுப்பினர் சஸ்பெண்ட்
இதனால், தவெக மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி மாமன்ற விதிகளை மீறி செயல்பட்டதாக 19- ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி மேயர் உத்தரவிட்டார். அத்துடன், உறுப்பினர் அல்லா பிச்சை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: “விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!




திமுக – தவெகவினர் இடையே கடும் வாக்குவாதம்
முன்னதாக, தவெக மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை விசில் அடித்தவாறு மாமன்றத்துக்குள் வந்தபோது, அவரது விசிலை திமுக உறுப்பினர்கள் பிடுங்க முயன்றதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அல்லா பிச்சை, மாமன்றத்தில் தொடர்ந்து விசில் அடித்ததால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதன்படி, மாமன்ற கூட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்திருந்தார்.
விசில் அடித்து சர்ச்சையில் சிக்கிய உறுப்பினர்
அதன் அடிப்படையில், மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமாக விசில் இருந்து வருகிறது. தேர்தல் பரப்புரை காலகட்டத்தில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் விசில் அடித்தவாறு தங்களது பரப்புரைகளை மேற்கொண்டு இருந்தனர். இதனால், விசிலானது தமிழக வெற்றி கழகத்தின் அடையாளமாக மாறிப்போனது. அதன் அடிப்படையிலேயே, தற்போது தவெகவில் புதிதாக இணைந்த திமுக மாமன்ற உறுப்பினர் விசில் அடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் – அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்