கூகுள் பே ஸ்கேம்… கோவையில் செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன பண மோசடி… மர்ம நபர் கைவரிசை!
Coimbatore Google Pay Fraud : கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை கடையில் அவசர தேவைக்காக ரூ. 800 வாங்கி விட்டு கூகுள் பேவில் அனுப்பி விட்டதாக மர்ம நபர் ஒருவர் நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்.
கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் வந்து, கடை உரிமையாளரிடம் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தை கூகுள் பே வாயிலாக அனுப்பி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய கடையின் உரிமையாளர், அந்த வாலிபர் கேட்ட ரூ. 800 ரொக்க பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட அந்த இளைஞர் தனது செல்போனில் உள்ள கூகுள் பே மூலமாக ரூ.800- ஐ அனுப்புவதாக பாவனை செய்துள்ளார். அதன்படி, ரூ.800 பணம் கூகுள் பை மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்டு விட்டதாக அந்த இளைஞர் தனது செல்போனில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கூகுள் பே ஸ்கிரீன் சாட்டை காண்பித்துள்ளார்.
வங்கி கணக்கில் வரவாகத ரூ. 800 ரொக்கம்
இதனை உண்மை என நம்பிய கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அவர் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். பின்னர், அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதைத் தொடர்ந்து, இரவில் கடையை அடைக்கும் போது, வரவு மற்றும் செலவு கணக்குகளை கடையின் உரிமையாளர் சரிபார்த்து உள்ளார். அப்போது, அந்த கணக்கில் ரூ. 800 மட்டும் வரவு வைக்கப்படாதது தெரியவந்தது. இதனால், கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை கடை உரிமையாளர் உணர்ந்தார்.
ஜவுளி கடையிலும் கூகுள் பே மூலம் மோசடி
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஜவுளி கடையில் மர்ம நபர் ஒருவர் போலியான கூகுள் பே செயலி மூலமாக பணம் அனுப்புவதாக கூறி ரூ. 2,150 மோசடி செய்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் வணிகர்களை குறிவைத்து மோசடி
தற்போது, கோயம்புத்தூரில் வணிகர்களை குறி வைத்து கூகுள் பே செயலிகள் வாயிலாக மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான வணிகர்கள் பணத்தை இழந்து வருகின்றனர். எனவே, வணிகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 7.5% உள் ஒதுக்கீட்டை உயர்த்தத் தமிழக அரசு திட்டம்!!
Follow Us