AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஜெயலலிதா செஞ்ச மாதிரி செய்ய தைரியம் இருக்கா?”.. இபிஎஸ்-க்கு சி.வி.சண்முகம் சரமாரி கேள்வி!!

அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு நிர்வாகிகள்தான் காரணம் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா என கேள்வி எழுப்பியதுடன், தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்காமல் பழியை மற்றவர் மீது போடுவதாகச் சாடினார்.

“ஜெயலலிதா செஞ்ச மாதிரி செய்ய தைரியம் இருக்கா?”.. இபிஎஸ்-க்கு சி.வி.சண்முகம் சரமாரி கேள்வி!!
சி.வி.சண்முகம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Aug 2026 13:20 PM IST

சென்னை, ஆகஸ்ட் 10: அதிமுக தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக தலைவர்களுக்கிடையே மீண்டும் பகிரங்க மோதல் வெடித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக சந்தித்த பின்னடைவுக்கு மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளுமே காரணம் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பாதுகாப்பதாக நினைத்துக்கொண்டு, அவரை மேலும் சிறுமைப்படுத்தும் வகையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், கட்சியின் தொடர் சரிவு, தவறான கூட்டணி உத்திகள் மற்றும் தோல்விக்கான உண்மைச் சூழல் குறித்துச் செய்தியாளர்கள் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகளை சி.வி. சண்முகம் முன்வைத்தார்.

இதையும் படிக்க: “தமிழ் வெறும் மொழியல்ல, அது நம் உயிர்!”.. சட்டப்பேரவையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முதல்வர் விஜய்.. ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தீர்மானம் நிறைவேற்றம்!!

வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரே அளவுகோல் தேவையா?

செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எடப்பாடி பழனிசாமியின் சொந்தச் செல்வாக்கே காரணம் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்வதை முற்றிலுமாக மறுத்தார். 47 தொகுதிகளின் வெற்றிக்கு மட்டும் பொதுச்செயலாளரின் செல்வாக்கு காரணம் என்றால், மீதமுள்ள 181 தொகுதிகளில் அவரது செல்வாக்கு செல்லாக்காசாகிவிட்டதா எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த பூத்திலேயே இரட்டை இலை சின்னத்திற்கு குறைந்த வாக்குகளைப் பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், வெற்றி பெற்றால் தலைவருக்குப் பெருமை, தோல்வி அடைந்தால் மட்டும் மாவட்டச் செயலாளர்கள் மீது பழியைப் போடுவதா என வினவினார்.

மண்டல வாரியான தோல்வி பகுப்பாய்வு:

அதிமுக பெற்ற வெற்றிகளையும் தோல்விகளையும் மண்டல வாரியாகப் பகுப்பாய்வு செய்து பேசிய சி.வி. சண்முகம், தென் மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மண்டலங்களில் அதிமுக முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 37 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே கட்சி வெற்றி பெற்றதாகவும், தென் மாவட்டங்களில் 7 மாவட்டங்களைச் சேர்த்து 3 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன என்றும் கூறினார். வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி 34 தொகுதிகளைக் கைப்பற்றியதற்கு பாட்டாளி மக்கள் கட்சியுடன் அமைக்கப்பட்ட கூட்டணியே காரணம் எனக் குறிப்பிட்ட அவர், உண்மையான தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் கூட்டங்களைக் கூட்டித் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து நாடகமாடுவதாகச் சாடினார்.

இதையும் படிக்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 7.5% உள் ஒதுக்கீட்டை உயர்த்தத் தமிழக அரசு திட்டம்!!

தலைமை மீதான விமர்சனம்:

தேசிய மற்றும் மாநில அளவில் எந்தவொரு பெரிய அரசியல் கட்சித் தலைவரும் தேர்தலில் படுதோல்வி அடையும் போது அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்பது வழக்கம் என்று கூறிய சி.வி. சண்முகம், 1996-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் தோல்விக்குத் தானே பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்தார். ஆனால், தற்போதைய தலைமை தோல்விக்கு எந்தப் பொறுப்பும் ஏற்காமல் நிர்வாகிகள் மீது பழியைச் சுமத்துகிறது என்றார். மேலும், திமுக எதிர்ப்புக் கொள்கை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கத் தவறியதும், பிரிந்து சென்றவர்களைச் சேர்க்காததுமே தொடர் தோல்விகளுக்கு முக்கியக் காரணம் என்றும், திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாகத் தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Follow Us