AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழ் வெறும் மொழியல்ல, அது நம் உயிர்!”.. சட்டப்பேரவையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முதல்வர் விஜய்.. ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தீர்மானம் நிறைவேற்றம்!!

CM Vijay Assembly Speech: தமிழ் சட்டப்பேரவையில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ் வெறும் மொழியல்ல, அது நம் உயிர் மற்றும் உணர்வு எனக் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலக நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பதற்கான அரசின் தனித் தீர்மானத்தை அவர் முன்மொழிந்து நிறைவேற்றினார்.

“தமிழ் வெறும் மொழியல்ல, அது நம் உயிர்!”.. சட்டப்பேரவையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முதல்வர் விஜய்.. ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தீர்மானம் நிறைவேற்றம்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Aug 2026 10:53 AM IST

சென்னை, ஆகஸ்ட் 10: தமிழ்நாட்டின் கலை, பண்பாடு மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் சுயாட்சி அடையாளங்களை நிலைநிறுத்துவதிலும் சட்டமன்ற பேரவை எப்போதும் முக்கியக் களமாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தமிழகச் சட்டப்பேரவையில் தமிழர்களின் உணர்வாக விளங்கக்கூடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய், தமிழ் மொழியின் பெருமைகளையும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டி மிக உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தினார். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 7.5% உள் ஒதுக்கீட்டை உயர்த்தத் தமிழக அரசு திட்டம்!!

தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்று சிறப்பு:

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் தொடர்புக்கான ஊடகம் தான். ஆனால், நமக்குத் தமிழ் என்பது வெறும் பேசும் மொழியோ, ஓசையோ மட்டுமல்ல; அது நம் உயிர், உணர்வு மற்றும் அடையாளம்” எனக் குறிப்பிட்டார். 1891-இல் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நாடக நூலின் பாயிரத்தில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்து, இந்திய நாட்டின் நெற்றியில் அமைந்த திலகம் போலத் தமிழ்நாட்டை உயர்த்திப் பிடிப்பதாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாட்டில் 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாகப் பாடப்பட்டு வருவதும், 2021 டிசம்பர் 17 அன்று இது மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.

மாநில அரசின் உறுதியான நிலப்பாடு:

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட நடைமுறைகள் மற்றும் கடிதங்களில் மாநிலப் பாடல்கள் குறித்த தெளிவான வழிமுறைகள் இல்லாத சூழலில், தமிழ்நாடு அரசு உரிய திருத்தங்களை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்ததை முதல்வர் சுட்டிக்காட்டினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கி உள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் நிலைநிறுத்துவது மாநில அரசின் கடமையாகும். தமிழ்த்தாய் வாழ்த்து அனைத்து உலகமும் இன்பமுற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டதே தவிர, எந்தவொரு மொழியையோ, மதத்தையோ, தனி மனிதரையோ தாழ்த்திப் பேசவில்லை என்பதையும் அவர் உறுதியாகப் பதிவு செய்தார்.

இதையும் படிக்க : ‘நாட்டாமை குடும்பம் என பச்சைக்குத்தி கொள்ளுங்கள், என்னை எளிதில் சந்திக்கலாம் ‘ – ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்திய சரத்குமார்

ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தமிழகத்தின் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை அமைப்புகளின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாகத் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் வாசித்தார். “தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது” என்று அறிவித்த அவர், இத்தீர்மானம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் உயரிய கொள்கையை வெளிப்படுத்துவதாகவும், தமிழர்களை ஒன்றிணைக்கும் பொது அடையாளமாகவும் இருக்கும் எனக் கூறி அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினார்.

Follow Us