துக்க வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பரிதாப பலி.. புதுச்சேரியில் பெருஞ்சோகம்!
Puducherry Elderly Woman Dies : புதுச்சேரி மாநிலத்தில் துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற மூதாட்டி ப்ரீசர் பாக்ஸில் ஏற்பட்ட ஏற்பட்ட மின்சார கசிவால் பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்த மேலும் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் அருகே உள்ள காக்கையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி ( 49 வயது). இவர், கடந்த சில மாதங்களாக தீவிர உடல் நலக்குறைவால் அவதி அடைந்து வந்தார். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரது சடலம் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் ஃப்ரீசர் பாக்ஸ்-இல் வைக்கப்பட்டிருந்தது. பழனியின் சடலத்துக்கு அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். அதன்படி, இன்று திங்கள்கிழமை காலை அதே பகுதியில் சேர்ந்த ராஜாத்தி ( 75 வயது) என்பவர் துக்கம் விசாரிப்பதற்காகவும், பழனியின் சடலத்துக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் அவரது வீட்டுக்கு சென்றார்.
மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட இருவர்
அப்போது, ஃப்ரீசர் பாக்ஸ்-இல் வைக்கப்பட்டிருந்த பழனியின் உடலுக்கு மூதாட்டி ராஜாத்தி மரியாதை செலுத்தி விட்டு எதிர்பாராத விதமாக ஃப்ரீசர் பாக்ஸை தொட்டார். அப்போது, திடீரென பெட்டியில் மின்சார கசிவு ஏற்பட்டு மூதாட்டி ராஜாத்தியை மின்சாரம் தாக்கியது. இதில், மூதாட்டி தூக்கி வீசப்பட்டார். அப்போது, அவரது அருகில் நின்று கொண்டிருந்த நபர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில், இருவரும் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு.. களமிறங்கும் 65 சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!




பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி- ஒருவருக்கு சிகிச்சை
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃப்ரீசர் பாக்ஸ்-இன் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும், அந்த பெட்டிக்கு சென்ற மின் இணைப்பையும் அந்த பகுதி மக்கள் துண்டித்தனர். தொடர்ந்து, இருவரையும் உடனடியாக மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி ராஜாத்தி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் பாய்ந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இது தொடர்பாக தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக மின்சார கசிவு ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக மூதாட்டி ராஜாத்தியின் குடும்பத்தினர் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க வீட்டுக்கு சென்ற மூதாட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கடலூர்- புதுச்சேரி எல்லையில் ரத்தக்களம்.. நாட்டு வெடிகுண்டு வீசி கார் ஓட்டுநர் கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்!