வருண பகவானே இறங்கி வா.. இரு கழுதைகளுக்கு மேள தாளத்துடன் திருமணம்.. வேலூரில் வினோத வழிபாடு!
Donkeys Wedding In Vellore : வேலூர் மாவட்டத்தில் மழை வேண்டி ஆண் மற்றும் பெண் கழுதைகளுக்கு ஓடுகத்தூர் கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் மக்கள் மொய் வைத்து அன்னதானத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு வினோதமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தாலும், எல் நினோவின் தாக்கத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத வழிபாட்டில் மக்கள் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர், கொட்டாவூர், மேலரசம்பட்டு, வேப்பங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், இந்த பகுதியில் மழை பெய்ய வேண்டியும், விவசாயிகளின் நலனுக்காகவும் இந்த பகுதி மக்கள் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பாரம்பரிய முறைகளை பின்பற்றி வருகின்றனர்.
மேள தாளங்கள் முழங்க இரு கழுதைகளுக்கு திருமணம்
அதன்படி, ஒரு ஆண் கழுதை மற்றும் ஒரு பெண் கழுதைக்கு மணமகன் மற்றும் மணமகள் போல ஆடைகள் உடுத்தி, மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பின்னர், மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக சென்று இரு கழுதைகளும் அழைத்துவரப்பட்டன. பின்னர், ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தியாகங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் முன்னிலையில் இரு கழுதைகளுக்கும் தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
மேலும் படிக்க: மனதை ரணமாக்கும் சம்பவம்.. புதுக்கோட்டையில் மகள்கள் கண்முன்னே உயிரிழந்த பெற்றோர்.. லாரி ரூபத்தில் வந்த எமனால் சோகம்!




திருமணத்தில் மொய் எழுதிய கிராம மக்கள்
வினோதமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர். அவர்கள், மனிதர்களுக்கு நடைபெறும் திருமண விழாவை போன்று, கழுதைகள் திருமணத்துக்கும் மொய் எழுதி ஆசீர்வாதம் பெற்றனர். அத்துடன், இந்த திருமணத்தில் பங்கேற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கையும் இந்த பகுதி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த திருமணத்தில் ஆர்வமாக பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
வினோதமாக பார்க்கப்படும் கழுதை திருமணம்
தமிழகத்தில் மழை பொய்த்து போனால் சில இடங்களில் வருண பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது உள்ளிட்ட வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதை பார்த்திருப்போம். ஆனால், சினிமாக்களில் வருவது போல, வேலூர் மாவட்டத்தில் இரு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து, மழைக்காக வழிபாடு செய்த நிகழ்வு மக்கள் மத்தியில் வினோதமாக பார்க்கப்படுகிறது… பேசப்படுகிறது…
மேலும் படிக்க: சென்னையில் கொடூரம்.. அக்கா வீட்டில் தஞ்சமடைந்த மனைவியை கதவை பூட்டி கழுத்தை அறுத்த கணவன்!