AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி.. பாமக தலைவராக மீண்டும் அன்புமணி ராமதாஸ் தேர்வு.. பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

PMK President Anbumani Ramadoss: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வந்த உட்கட்சி பிணக்குகள் முடிவுக்கு வந்த நிலையில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் 2வது முறையாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக் குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி.. பாமக தலைவராக மீண்டும் அன்புமணி ராமதாஸ் தேர்வு.. பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
அன்புமணி ராமதாஸ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Jul 2026 13:20 PM IST

மாமல்லபுரம், ஜூலை 29: பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது ஆண்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக, அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பாமக நிறுவனர் ராமதாஸ் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிக்க : பழனி நில மோசடி வழக்கில் திருப்பம்.. சிக்கிய முக்கியப் புள்ளிகள்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி!

முற்றுப்புள்ளி வைத்த “துறவரம்”:

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், தலைவர் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே கொள்கை ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடிய மருத்துவர் ராமதாஸ், “நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்; இனி அரசியல் குறித்துப் பேசப்போவதில்லை. கட்சியையும், அதன் எதிர்காலத்தையும் முழுமையாக அன்புமணி ராமதாஸிடம் ஒப்படைக்கிறேன்” என அறிவித்தார். நிறுவனரின் இந்த ஆசிர்வாதத்துடன், இன்றைய பொதுக்குழு கூட்டம் மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றது.

போட்டியின்றித் தேர்வான நிர்வாகிகள்:

பாமகவின் அமைப்புத் தேர்தல் விதிகளின்படி, கடந்த ஜூலை மாதம் முதல் உட்கட்சித் தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மிகச் சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியப் பொறுப்புகளுக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மேடையில் வெளியானதும், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டு புதிய நிர்வாகிகளுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பொதுக்குழுவில் முக்கியத் தீர்மானங்கள்:

புதிய நிர்வாகிகளின் தேர்வோடு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழ்ச் சமூகத்திற்காக உழைத்து, தற்போது அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் தியாகத்தைப் போற்றும் வகையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சௌமியா அன்புமணிக்கு முக்கிய பொறுப்பு:

மேகதாட்டு அணை விவகாரம், காவிரி நதிநீர்ச் சிக்கல், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரான சௌமியா அன்புமணிக்கு கட்சியில் புதிய மற்றும் முக்கிய மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தகட்ட அரசியல் நகர்வு:

பாமகவின் உட்கட்சி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி எடுக்கப்படும் முடிவுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், புதிய நிர்வாகிகள் தேர்வு விவரங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பதிவு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதையும் படிக்க: அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?

ராமதாஸின் நேரடித் தலைமையின்றி நடைபெறும் முதல் பெரிய அரசியல் நிகழ்வு இது என்பதால், அன்புமணியின் இந்தத் தலைமை பாமகவை அடுத்தகட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்லப் போகிறது என்பதே தமிழக அரசியல் கவனிக்கும் முக்கிய விஷயமாக உள்ளது.

Follow Us