பழனி நில மோசடி வழக்கில் திருப்பம்.. சிக்கிய முக்கியப் புள்ளிகள்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி!
Palani Temple Land Scam: பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், வெள்ளைத்துறை மற்றும் முருகதாஸ் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் விடிய விடிய நடத்தி வந்த விசாரணையின் முடிவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல், ஜூலை 29: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், வெள்ளைத்துறை மற்றும் முருகதாஸ் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறிப் போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.12 கோடிக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதையும் படிக்க : அரசு ஊழியர் நீண்ட நாள் பணியிடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு!
சிபிசிஐடி கையில் வழக்கு:
இச்சம்பவம் தொடர்பாகப் பழனி அடிவாரம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது முதற்கட்டமாக வழக்குப் பதியப்பட்டது. மோசடியின் பரிமாணம் மற்றும் இதில் தொடர்புடை புள்ளிகளின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜூலை 15-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை முழுமையாக சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனி பகுதியில் முகாம் அமைத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
1882 ஆவணங்கள் தந்த திருப்பம்:
விசாரணையின் முக்கியத் திருப்பமாக, நிலத்தின் உண்மையான பரம்பரை உரிமையாளர்கள் தரப்பில் 1882-ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வரும் நிலத்திற்கான அசல் பத்திரங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், தற்போது நடைபெற்றுள்ள பத்திரப்பதிவு முற்றிலும் போலி ஆவணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை:
ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், தனிப்படை அமைத்துத் தேடி வந்த சிபிசிஐடி போலீசார், நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வேளையில் வெள்ளத்துறை, முருகதாஸ் உள்ளிட்ட 3 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, சிபிசிஐடி எஸ்பி முன்னிலையில் விடிய விடியத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : மொட்டை அடித்தால் ரூ.15,000 – சேலத்தில் பெண்களை மொட்டை அடிக்க வைத்து மோசடி
அவர்கள் எப்போது, எவ்வாறு இந்த போலி ஆவணங்களை உருவாக்கினார்கள் மற்றும் இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நிறைவடைந்த பின் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனச் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.