வீணாகும் மழைநீரை சேமிப்பது எப்படி? சௌமியா அன்புமணி சொன்ன யோசனை!
: தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 11, 2026 இன்று நடைபெற்று வருகிறது. பட்ஜெட் அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, பயிர்க்கடன் முழு தள்ளுபடி என்ற அறிவிப்பு பட்ஜெட் அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 11 : தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 11, 2026 இன்று நடைபெற்று வருகிறது. பட்ஜெட் அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, பயிர்க்கடன் முழு தள்ளுபடி என்ற அறிவிப்பு பட்ஜெட் அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 1 ஏக்கர், 2 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானியங்கள் பற்றி எதுவும் தெரியாது. அதிகளவு நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகள்தான் மானியம் பற்றி அறிவார்கள் என்றார்.
மேலும் பேசிய அவர், 2 அரசாணைகளால் 50,000 அரசுப் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. நிரந்தர பணியிடங்கள் ஒப்பந்தப் பணிகளாக மாற்றப்பட்டுள்ளன. அரசு வேலைக்கான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. தனியார் நிறுவனங்களில், அந்தந்த பகுதி மக்களுக்கு 80% வேலையை ஒதுக்க வழிவகை செய்ய வேண்டும். தனியார் நிறுவன பணி ஒதுக்கீடு குறித்து அரசு கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : மதுரையில் சோகம்.. மழலையர் பள்ளி வகுப்பறையில் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம்!




பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தை அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி. பட்ஜெட்டில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. 5 கோடி விவசாய மக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததும் மிகக்குறைவான தொகை. மகளிர், விவசாயிகளுக்கான திட்டங்கள், இயற்கை விஞ்ஞானி விருது அறிவிப்பை வரவேற்கிறேன். பாலாறு, காவிரி ஆறு உள்ளிட்ட 35 ஆறுகளில் 10 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்டலாம்.. அப்படி கட்டினால் யாரிடமும் நாம் தண்ணீருக்காக கையேந்த வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.
வீணாகும் மழைநீரை சேமிப்பது எப்படி?
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும். குறைதந்தது 100 டிஎம்சி நீரை சேமிப்பதன் மூலம், அண்டை மாநிலங்களில் கையேந்த வேண்டாம். காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் கடலில் கலக்கும் தண்ணீரை சேகரிக்க முடியும். ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம் நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
இதையும் படிக்க : இந்த தென் மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து மற்றும் பாதை மாற்றம் – முழு விவரங்கள்
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.