பெரம்பலூர் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியரை மிரட்டி முட்டிக்கால் போட வைத்தார்களா? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!
Perambalur Govet Teacher Kneel : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரை முட்டிக் கால் போட வைத்த சம்பவம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், தேனூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற பட்டதாரி ஆசிரியர் ராஜா மற்றும் சித்ரா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஊராட்சி மன்ற செயலாளர் ராஜசேகர், அவரது மனைவியான பள்ளி மேலாண்மைக் குழு தலைவரின் மகன் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூலை 30- ஆம் தேதி ஆசிரியர் ராஜா மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் குறித்து வகுப்பறையின் கரும்பலகையில் 12- ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஆபாசமாக விமர்சித்து, கேலி சித்திரம் வரைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வணிகவியல் ஆசிரியர் கவின் தேவ், சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து கண்டித்ததாகவும், அவரை முட்டி போட வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், இது தொடர்பாக அந்த மாணவர், தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்ட மாணவரின் தந்தை ராஜசேகர் பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர் கபில் தேவிடம் தகராறு ஈடுபட்டுள்ளார்.
ஆசிரியரை மிரட்டி முட்டி போட வைத்த சம்பவம்
மேலும், ஆசிரியர் கபில் தேவ்வை மிரட்டியதுடன், அவரை பள்ளியில் முட்டிக்கால போட வைத்ததாக பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் ஆசிரியர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சரண்யா அரியிடம் புகார் மனு அளித்தனர். அத்துடன் அந்த பகுதி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்துமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: கரூரில் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்.. இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்..




இரு கோணங்களில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
அதன் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அரசு பள்ளியில் மாணவர் ஒழுக்கம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனை மற்றும் ஆசிரியரை சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர் அவமதித்ததாக எழுந்த புகார் என இரு கோணங்களில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவரின் ஒழுங்கீன செயலை கண்டித்த ஆசிரியரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மிரட்டல் விடுத்து முட்டிக் கால் போட வைத்த சம்பவம் அந்த பள்ளியில் மட்டுமின்றி அந்த பகுதி மற்றும் கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!