கொடுத்த நகையை திரும்பி கேட்ட பெண்ணை வெட்டிக் கொலை.. காவலர் கைது.. தூத்துக்குடியில் கொடூரம்!!
Thoothukudi Shocker: தூத்துக்குடி அருகே கடனாக வாங்கிய நகையைத் திருப்பித் தராமல், அதைத் கேட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பிரியா என்ற பெண்ணைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த தட்டார்மடம் காவல் நிலையக் காவலர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட இந்த உறைையவைக்கும் நிகழ்வின் முழு விவரங்கள் இதோ.
தூத்துக்குடி, செப்டம்பர் 02: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானந்தல் கிராமத்தில் அனைவரையும் உறைய வைக்கும் கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த பிரியா என்ற பெண் இரக்கமின்றி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முத்துக்குமார் என்ற காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அடமானம் வைப்பதற்காக வாங்கிய நகையைத் திரும்பக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதமே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா வழக்கு.. உயர்நீதிமன்றம் வைத்த செக்.. அலறவிட்ட இபிஎஸ்!!
நகைத் தகராறும் நடந்த கொடூரமும்:
கொலை செய்யப்பட்ட பிரியா முடிவைத்தானந்தல் கிராமத்தில் சொந்தமாக ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது தங்கை முத்துலட்சுமியுடன் தட்டார்மடம் காவல் நிலையக் காவலரான முத்துக்குமாருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் முத்துலட்சுமியிடம் இருந்து முத்துக்குமார் நகையை வாங்கி அடமானம் வைத்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாகியும் நகையைத் திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்ததால், நேற்று இரவு பிரியாவின் ஜெராக்ஸ் கடைக்கு வந்த முத்துக்குமாரிடம் பிரியா இதுகுறித்துத் தீவிரமாகத் தட்டிக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அருவாளால் வெட்டிப் படுகொலை:
வாக்குவாதம் முற்றிய நிலையில், கடுமையான ஆத்திரமடைந்த காவலர் முத்துக்குமார், கடையில் இருந்த கம்பி போன்ற ஆயுதங்களால் பிரியாவைத் தாக்கியதுடன், தான் வைத்திருந்த அருவாளால் அவரைக் கொடூரமாக வெட்டியுள்ளார். பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த புதுக்கோட்டை காவல்துறையினர் பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. கோவையில் கணக்கெடுப்பில் இறங்கிய அதிகாரிகள்.. விரைவில் தங்க மழை!
தலைமறைவாக இருந்த காவலர் அதிரடி கைது:
கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த காவலர் முத்துக்குமாரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்று காலை முடிவைத்தானந்தல் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருந்ததும், பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.