தருமபுரியில் சட்டவிரோத பாலின கண்டறிதல்- கருக்கலைப்பு.. செவிலியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
Dharmapuri Nurse Arrested : தருமபுரியில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து பெண் என தெரிந்ததால், கருக்கலைப்பு செய்த செவிலியரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அதியமான் கோட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், அந்த பெண் மீண்டும் கர்ப்பமான நிலையில், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிவதற்கு அந்த தம்பதி விரும்பி உள்ளனர். அதன்படி, இடைத்தரகர் பச்சியம்மாள் மூலம் செவிலியர் கற்பகத்திடம் சிசுவின் பாலினத்தை கண்டறிவதற்கு முயற்சி செய்துள்ளனர். இதற்கு, அந்த செவிலியரும் பாலினத்தை கண்டறிந்து சொல்வதாக தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, செவிலியர் கற்பகம் சட்ட விரோதமாக ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்துள்ளனர். இதில், இந்த சிசுவின் பாலினம் பெண் என தெரிய வந்தது. ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்த அந்த தம்பதி மீண்டும் பெண் குழந்தை பிறப்பதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த சிசுவை கலைத்துவிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதியமான்கோட்டையில் புகார் அளிப்பு
இதில், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் தருமபுரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாரதி மற்றும் அதிகாரிகள் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், தர்மபுரியை சேர்ந்த செவிலியர் கற்பகம் ( 43 வயது), இடைத்தரகர் பச்சியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: “கோவையில் மீண்டும் கொடூரம்!”.. வீடு புகுந்து பெண் அடித்துக் கொலை.. தனிப்படை அமைத்து தீவிர விசாரணை!




ஏராளமானோருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு
அத்துடன், இது போன்று சட்டவிரோதமாக சிசுவின் பாலினத்தை கண்டறிவது மற்றும் கருக்கலைப்பு ஆகிய குற்ற செயல்களில் ஏற்கனவே ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதன்படி, செவிலியர் கற்பகம் மற்றும் இடைத்தரகர் பச்சியம்மாள் ஆகியோர் மீது போலீசார வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் கபிலன் அறிவுறுத்தலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் சரவணன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
குண்டர் சட்டத்தில் செவிலியர் கைது
அதன்படி, செவிலியர் கற்பகத்தை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிவதும், கேட்பதும் குற்றம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவையும், சட்டத்தையும் மீறிய செவிலியர் மீது கைது நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!
மேலும் படிக்க: