கீழ் மதுரையில் பெரும் பரபரப்பு.. ரயிலை நிறுத்த தவறிய லோகோ பைலட்.. ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
Keel Madurai Railway Station : ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் கீழ் மதுரை ரியல் நிலையத்தில் நிற்காமல் சென்ற நிலையில், அந்த ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் ரயில் கார்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆடி மாதத்தையொட்டி, ராமேஸ்வரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது. அத்துடன், ஆடி அமாவாசை என்பதால் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு ரயில் ( வண்டி எண் 06103) இயக்கப்பட்டது. இந்த ரயிலானது மதுரையில் இருந்து நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு 2:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்று அடைந்தது. அதேபோல, மறு மார்க்கத்தில் ( வண்டி எண்- 06104) இராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 6:00 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ஆனால், இந்த ரயில் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இந்த ரயில் நிலையத்தில் ரயில் நிற்காமல் சென்றதற்கான காரணம் தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ரயில் ஓட்டுநர் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை
மதுரையில் இருந்து சென்ற ரயிலுக்கு கீழ் மதுரை மற்றும் திருப்புவனம் ரயில் நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த ரயிலுக்கு அந்த நிலையங்களில் நிறுத்தங்கள் வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதனை, கவனிக்காமல் ரயிலை இயக்கி கீழ் மதுரை ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, மதுரையில் இருந்து சிறப்பு ரயிலை இயக்கிய என்ஜின் ஓட்டுனர், உதவி ஓட்டுநர் மற்றும் ரயில் கார்டு ஆகியோர் மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!




ரயில் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி
ஆடி மாத திருவிழாவையொட்டி, இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கு கீழ் மதுரை, திருப்புவனம், மானாமதுரை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, ஏராளமான பயணிகள் மேற்கண்ட ரயில் நிலையங்களில் ராமேஸ்வரம் செல்வதற்காக காத்திருந்தனர். இதனிடையே, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சிறப்பு ரயில் கீழ்மதுரை ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால், அங்கிருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆட்டோ மூலம் பயணிகள் அனுப்பி வைப்பு
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அந்த ரயில் நிலையத்தின் மாஸ்டர் மதுரையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, ரயிலில் பயணிப்பதற்காக டிக்கெட் வாங்கி இருந்த சுமார் 10- க்கும் மேற்பட்ட பயணிகளிடம் டிக்கெட்டை திரும்ப பெற்று, அதற்கான கட்டணத்தை திரும்ப கொடுத்ததாக தெரிகிறது. அத்துடன், அவர்களை ஆட்டோ மூலமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெற்கு ரயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் பலத்த காற்றுடன் 2 நாட்களுக்கு கனமழை – எங்கெல்லாம் தெரியுமா?