“கோவையில் மீண்டும் கொடூரம்!”.. வீடு புகுந்து பெண் அடித்துக் கொலை.. தனிப்படை அமைத்து தீவிர விசாரணை!
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண் வீட்டில் ரத்த வெள்ளத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ் கோர்ஸ் ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, ஆகஸ்ட் 13: கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகளை அதிகரிக்கும் வகையில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்றச்சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாகக் கல்லூரி மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு மாறுவதற்குள்ளாகவே, தற்போது பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் வீட்டின் உள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர் சம்பவ இடத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்:
கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. கணவரை இழந்த இவர், தனது மகன் ராஜாவுடன் வசித்து வந்தார். வழக்கம் போல் நேற்றைய தினம் ராஜா வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சாந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவில் வேலை முடிந்து ராஜா வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பூட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சாந்தி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக்கடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தடயவியல் சோதனை:
இச்சம்பவம் குறித்து ராஜா உடனடியாக ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சாந்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் இருந்த முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர், கொலையாளிகளைக் கண்டறியத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: “யானைகள் தினத்தில் நேர்ந்த நெஞ்சை ரணமாக்கும் துயரம்!”.. ரயில் மோதி தாய், குட்டி யானைகள் பரிதாப பலி!
கொலைக்கான காரணம் என்ன?
முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த நகை அல்லது பணம் எதுவும் திருடப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொலை கொள்ளை நோக்கத்திற்காக நடக்கவில்லையா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாகச் சட்டமன்றத்தில் கூட கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தற்போது பெண் ஒருவர் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.