பெற்ற மகனை பலி வாங்கிய கள்ளக்காதல்.. மயிலாடுதுறையில் அரங்கேறிய கொடூர கொலை.. தாய்- கள்ளக்காதலன் கைது!
Mayiladuthurai Crime: மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தையை கீழே தள்ளி கொலை செய்து விட்டு தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகம் ஆடிய பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை செம்பனார்கோவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதி, ஆலவேலி கிராமத்தை சேர்ந்தவர்கள் கனிவண்ணன் ( 31 வயது). கூலி தொழில் செய்து வரும் கனிவண்ணன் அதே தெருவை சேர்ந்த கவிப்பிரியா ( 25 வயது) என்பவரை காதலித்து கடந்த 2020- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கவிப்பிரியாவுக்கு மயிலாடுதுறையை அருகேயுள்ள அரிவேளூர் கிராமத்தை சேர்ந்த தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு பணம் வசூல் செய்யும் அபினேஷ் ( 30 வயது) என்பவருடன் திருமணத்துக்கு முன்பு நட்பின் அடிப்படையில் பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில், அந்த நட்பு இருவரிடையே கள்ள தொடர்பாக மாறியது. இதை அறிந்த கனிவண்ணனுக்கும், கவிப்பிரியாக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பாத்ரூமில் வழுக்கி விழுந்து குழந்தை பலத்த காயம்
இந்த பிரச்சனை பெரிதான நிலையில், கவிப்பிரியா தனது கணவர் கனிவண்ணனை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்து ஆக்கூர் பாரதி வீதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். அங்கு சென்ற நிலையிலும், அபினேஷ் உடனான கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 25- ஆம் தேதி தனது 3 வயது இளைய மகன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாக கூறி மயிலாடுதுறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக கவிப்பிரியா அனுமதித்தார்.
மேலும் படிக்க: குடிநீரில் கழிவுநீர் கலப்பா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்!




காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என புகார்
தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டு 3 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் 29- ஆம் தேதி குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக, கனிவண்ணன் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரியின் பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து கவிப்பிரியா மற்றும் அபினேஷ் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
குழந்தையை சுவரில் மோதி நாடகமாடிய தாய் – கள்ளக்காதலன்
இதில், சம்பவத்தன்று கவிப்பிரியாவின் வீட்டுக்கு சென்ற அபினேஷ், குழந்தை அழுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சுவற்றில் தலையை மோதியதில் காயம் ஏற்பட்டதாகவும், இதனை இருவரும் குழந்தை பாத்ரூமில் விழுந்து காயமடைந்ததாக மறைத்த நாடகமாடியது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!