AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையில் அதிரடி.. காங்கிரஸ் பிரமுகர் காரில் கடத்திக் கொடூரத் தாக்குதல்.. 2 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் செய்த ‘அந்த’ குளறுபடி!

"நான் என்ன குற்றவாளியா?" எனக் கேட்டு தனசேகரன் கையை உதறிவிட்டுத் தப்ப முயன்றார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கிப் பிடித்து, தாங்கள் வந்த காரின் உள்ளே தள்ளி கடத்தியது. தனசேகரன் சத்தம் போட முயன்ற போது, அவரது வாயில் துணியை வைத்து அடைத்து முகம், வயிறு, இடுப்பு எனப் பல இடங்களில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

கோவையில் அதிரடி.. காங்கிரஸ் பிரமுகர் காரில் கடத்திக் கொடூரத் தாக்குதல்.. 2 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் செய்த ‘அந்த’ குளறுபடி!
கடத்தப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்
Sekaran S
Sekaran S | Published: 06 Jul 2026 13:53 PM IST

கோவை, ஜூலை 06: கோவையில் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி அணி மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான காட்டூர் தனசேகரன் என்பவர் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு காரில் கடத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்கள் திட்டமிட்டு ஆள் மாறி கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை சிங்காநல்லூர் அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் காந்திபுரம் காட்டூர் பகுதியில் பழைய கார் விற்பனை மையம் நடத்தி வருகிறார். மேலும், காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவின் மாவட்ட தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இதையும் படிக்க: தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு

இன்று காலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் தான் புதிதாகக் கட்டி வரும் வீட்டின் முன்பாக நின்று, தனது ஃபார்ச்சூனர் காரைக் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு எர்டிகா காரில் டிப்-டாப் உடை அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியுள்ளது. தனசேகரனிடம் பெயர் விபரத்தைக் கேட்டு உறுதி செய்த அந்த கும்பல், திடீரெனத் தாங்கள் மறைத்து வைத்திருந்த கைவிலங்கை அவரது கையில் பூட்ட முயன்றது.

வாயில் துணியை வைத்து சரமாரி தாக்குதல்:

“நான் என்ன குற்றவாளியா?” எனக் கேட்டு தனசேகரன் கையை உதறிவிட்டுத் தப்ப முயன்றார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கிப் பிடித்து, தாங்கள் வந்த காரின் உள்ளே தள்ளி கடத்தியது. தனசேகரன் சத்தம் போட முயன்ற போது, அவரது வாயில் துணியை வைத்து அடைத்து முகம், வயிறு, இடுப்பு எனப் பல இடங்களில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். காரை கோவை – பாலக்காடு புறவழிச்சாலையில் அதிவேகமாக இயக்கியபடியே, “2 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே உன்னை உயிருடன் விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அதற்குத் தனசேகரன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில் ஆள் மாறிய ‘ட்விஸ்ட்’:

பணம் தர மறுத்ததால் தனசேகரனை மீண்டும் கொடூரமாகத் தாக்கிய கும்பல், அவரது முகத்தைத் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து, பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளி ஒருவருக்கு அனுப்பியுள்ளது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த எதிர்முனையில் இருந்த நபர், “இவர் நாம் தேடிய ஆள் இல்லை… ஆள் மாறிவிட்டது!” என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கடத்தல் கும்பல், தனசேகரனை ஆள் நடமாட்டமில்லாத ஒரு காட்டுப் பகுதியில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

கைப்பற்றப்பட்ட பணம், போன்:

தாக்குதலில் படுகாயமடைந்த தனசேகரன், அங்கிருந்து தட்டுத்தடுமாறி நடந்து வந்து பாலக்காடு சாலையில் சென்ற ஒருவரிடம் உதவி கோரினார். அவர் தனசேகரனை மீட்டு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இச்சம்பவம் குறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட தனசேகரன், “என்னை கடத்தியவர்கள் யார், எதற்காகக் கடத்தினார்கள் என்று தெரியவில்லை. தொழில் போட்டி காரணமா என்பதும் புரியவில்லை. அவர்கள் ரவுடிகள் போலக் காணப்பட்டனர், காரின் பின்புறம் நம்பர் பிளேட் கூட இல்லை. தன்னிடம் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான சாம்சங் எஸ் 23 அல்ட்ரா செல்போன், ஃபார்ச்சூனர் காரின் சாவி மற்றும் புதிய வீட்டின் சாவி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனர். மேலும் என் செல்போன் மூலமாகவே என் வங்கி கணக்கில் இருந்த பணத்தை அவர்கள் கணக்கிற்கு மாற்றவும் முயன்றனர்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

தற்போது தனசேகரன் கோவை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனசேகரனின் வீடு, திருச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைக் கைப்பற்றி, சினிமா பாணியில் காங்கிரஸ் பிரமுகரைக் கடத்திய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Follow Us