AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகங்கையில் 13ம் நூற்றாண்டு ‘சிங்கம் பொறித்த’ அரியவகை கல்வெட்டு கண்டெடுப்பு!

இப்பகுதியில் கிடைத்த முந்தைய கல்வெட்டுகளில் இவ்வூர் 'முடிகொண்ட சோழபுரம்' மற்றும் 'செயங்கொண்ட சோழபுரம்' என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள புதிய கல்வெட்டில் முதன்முறையாக 'செயங்கொண்ட பாண்டியபுரம்' என்று பெயர் மாற்றம் பெற்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது வரலாற்று ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் 13ம் நூற்றாண்டு ‘சிங்கம் பொறித்த’ அரியவகை கல்வெட்டு கண்டெடுப்பு!
அரியவகை 'ஆசிரியம்' கல்வெட்டு
Sathis S
Sathis S | Updated On: 06 Jul 2026 14:24 PM IST

சிவகங்கை, ஜூலை 06: சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் சிங்கச் சின்னம் பொறித்த, 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை ‘ஆசிரியம்’ கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் வரலாற்றுப் பின்னணியை விளக்கும் முக்கியச் சான்றாக இது பார்க்கப்படுகிறது. சோழபுரம் கண்மாய்ப் பகுதியில் விசித்திரமான உருவம் பொறித்த கல் ஒன்று கிடப்பதாக, அவ்வூரைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் கா. காளிராசா மற்றும் செயலர் இரா. நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிக்க : வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

செய்தியாளர்களிடம் பேசிய புலவர் கா. காளிராசா:

“சோழபுரம் பகுதியில் தொடர்ச்சியாகப் பழமையான கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. கடந்த மாதத்தில் தான் இதே ஊரில் ‘புலிச் சின்னம்’ பொறித்த ஆசிரியம் கல்வெட்டு ஒன்று கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ‘சிங்கச் சின்னம்’ பொறித்த மற்றுமொரு அரியவகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இக்கல்வெட்டு இரண்டரை அடி உயரமும், ஒரு அடி நீளமும் கொண்டு, ஒன்பது வரிகளில் சொற்கள் மடக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் நடுவில் வில், அம்பும், இருபுறமும் மங்களச் சின்னங்களான குத்துவிளக்குகளும் செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டில் சிதைந்த எழுத்துக்கள் போக மீதமுள்ள வரிகள்:

எட்டி யெ

ரி பாண்டி ச

யங்கொ

ண்டபா

ண்டியபு

ரம்சிங்க

கொடி வீ

ரர் ஆசிரி

யம்.

ஏற்கனவே கிடைத்த புலிச் சின்ன கல்வெட்டிலும், தற்போதைய சிங்கச் சின்ன கல்வெட்டிலும் ‘எட்டி எரியன்’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும், கல்வெட்டு கிடைத்த கண்மாய் இன்றும் ‘எட்டிக்கண்மாய்’ என்றே அழைக்கப்படுகிறது. இதன் மூலம் எட்டி எரியன் என்பவன் இப்பகுதியின் ஆட்சியாளராக அல்லது அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம் என்றும், அவனது பெயர் ‘எட்டி எரிய பாண்டி’ என வருவதால் அவன் பாண்டிய நாட்டின் பிரதிநிதியாகச் செயல்பட்டிருக்கலாம் என்றும் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

மாறிய ஊர்ப் பெயர் ‘செயங்கொண்ட பாண்டியபுரம்’:

இப்பகுதியில் கிடைத்த முந்தைய கல்வெட்டுகளில் இவ்வூர் ‘முடிகொண்ட சோழபுரம்’ மற்றும் ‘செயங்கொண்ட சோழபுரம்’ என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள புதிய கல்வெட்டில் முதன்முறையாக ‘செயங்கொண்ட பாண்டியபுரம்’ என்று பெயர் மாற்றம் பெற்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது வரலாற்று ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆசிரியம்’ என்றால் என்ன?

பண்டைய காலத்தில் ‘ஆசிரியம்’ என்பது பாதுகாப்பைக் குறிப்பதாகும். அடைக்கலம் அளித்தல், மருத்துவ உதவி செய்தல், உணவு வழங்குதல் போன்றவை இதன் எல்லைக்குள் வரும். பழங்காலத்தில் வணிகர்கள் தரைவழியாகக் குழுக்களாகப் (வணிகச் சாத்துகள்) பயணம் செய்யும்போது, குறிப்பிட்ட இடங்களில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அப்போது அவர்களின் பொருட்களையும், வணிகக் குழுக்களையும் யானை மற்றும் குதிரைப் படைகளைக் கொண்டு வீரர்கள் பாதுகாத்துள்ளனர். அவ்வாறு பாதுகாப்பு வழங்கிய ‘சிங்கக்கொடி வீரர்களுக்கு’, எட்டி எரியன் என்ற தலைவன் அளித்த பாதுகாப்பு மற்றும் அடைக்கலச் செய்தியையே இக்கல்வெட்டு விவரிக்கிறது. இதன் எழுத்தமைதியைக் கொண்டு இது 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு

இளைஞர்களின் நெகிழ்ச்சிச் செயல்:

சிவகங்கை தொல்நடைக் குழு அடையாளப்படுத்தும் 4-ஆவது ஆசிரியம் கல்வெட்டு இதுவாகும். சோழபுரம் அரசர்குளம் பகுதியில் கிடைத்த இக்கல்வெட்டின் வரலாற்றுப் பெருமையை உணர்ந்த அவ்வூர் இளைஞர்கள், அதனைப் பாதுகாக்க முன்வந்துள்ளனர். அங்குள்ள அருண்மொழிநாதர் கோவில் அருகே தனி மேடை அமைத்து, வெயில் மற்றும் மழைநீர் படாதவாறு கூரை அமைத்து இக்கல்வெட்டைப் பாதுகாப்பாக வைக்க உள்ளதாகத் தொல்நடைக் குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Follow Us