தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் 3- ஆம் இடம்.. முதல்வர் விஜய் கருத்தை விளக்கிய பெ.சண்முகம்!
Tamil Thai Vazhthu: தவெக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்த கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் விளக்கி உள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த மே 10- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக அரசு பதவி ஏற்றது. அப்போது, தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றார். அவருடன் சேர்த்து 9 எம். எல். ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த நிகழ்வின்போது, முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு 3- ஆவதாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது பெரும் சர்ச்சையையும், அரசியல் தலைவர்கள் மத்தியில் கண்டனத்தையும் எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்து இருந்தது. அதில், மத்திய அரசு அனுப்பிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முதலில் வந்தே மாதரம். இரண்டாவது தேசிய கீதம். மூன்றாவது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் விளக்கம் அளித்திருந்தார்.
தவெக அமைச்சரவை விரிவாக்க நிகழ்வில்…
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கம் தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று வியாழக்கிழமை ( மே 21- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தின் போது மீண்டும், முதலில் வந்தே மாதிரம், 2- ஆவது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 3- ஆவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சைக்குள் ஆகி உள்ளது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலும் படிக்க: Tamil Nadu Ministers List : பெண் அமைச்சர்கள் எத்தனை பேர்?தமிழ்நாடு அமைச்சரவை முழு பார்வை!




3- ஆவதாக பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து
தமிழக வெற்றிக்கழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் வந்தே மாதரம், தேசிய கீதத்துக்கு பிறகு 3-ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய்யிடம் கேட்டோம். அதற்கு, தமிழக ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மற்றும் இத்தகைய நடைமுறையே பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவை குறிப்பிட்டார். மேலும், இந்த உத்தரவை மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் பேசினோம். ஆனால், எங்களது கோரிக்கையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார்.
தவெக அமைச்சரவையில் அதிமுக பங்கேற்றால்…
மேலும், மத்திய அரசின் பிரதிநிதி என்பதன் அடிப்படையில் மத்திய அரசின் உத்தரவை மட்டுமே நான் பின்பற்ற வேண்டும் ஆளுநர் தெரிவித்ததாக கூறினார். இது தொடர்பான உத்தரவு கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பட்டியல் இனத்தை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றது இதுவே முதல்முறை. இது வரவேற்கத்தக்கது. அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு எங்கள் ஆதரவை நிச்சயம் மறுபரிசீலனை செய்வோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள்.. கலங்க வைத்த ஏரியில் மூழ்கி பலியான மாணவனின் தேர்வு முடிவுகள்!