AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Ministers List : பெண் அமைச்சர்கள் எத்தனை பேர்?தமிழ்நாடு அமைச்சரவை முழு பார்வை!

Tamil Nadu Ministers List: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி முதலமைச்சருடன் 9 அமைச்சர்கள் முதற்கட்டமாகப் பதவியேற்றுக்கொண்ட நிலையில், ஏற்கனவே அமைச்சராக இருக்கும் எஸ். கீர்த்தனாவுடன் இன்று புதிதாகப் பதவியேற்கும் கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகியோரையும் சேர்த்து புதிய தமிழக அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Tamil Nadu Ministers List : பெண் அமைச்சர்கள் எத்தனை பேர்?தமிழ்நாடு அமைச்சரவை முழு பார்வை!
பெண் அமைச்சர்கள்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 21 May 2026 10:40 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 2026 மே 4-ந் தேதி வெளியான நிலையில், எந்தவொரு தனிக்கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அதிக இடங்களைக் கைப்பற்றிய போதிலும், தனித்து அரசை அமைக்க இயலாத சூழல் நிலவியதால், ஆளுநர் முதலில் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் அக்கூட்டணியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க-விற்கு தங்கள் ஆதரவை வழங்கின. இந்த அரசியல் திருப்பத்தால் ஆட்சி அமைப்பதற்கான முழு பலமும் த.வெ.க-வுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி த.வெ.க தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதற்கட்ட அமைச்சரவை மற்றும் துறை ஒதுக்கீடு

முதலமைச்சர் விஜயுடன் இணைந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் முதற்கட்டமாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த 2026 மே 16-ந் தேதியன்று துறைகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டன. இருப்பினும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட மிக முக்கிய நிர்வாகத் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டிருந்தது. இதனால் முழுமையான ஆட்சி நிர்வாகத்தை கொண்டு சேர்க்க அமைச்சரவையை விரிவுபடுத்த வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது.

ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை விரிவாக்கம்

இந்தத் தற்காலிகத் தொய்வை நீக்கும் வகையில், த.வெ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை 2026 மே 21 இன்று விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழை தலைமைச் செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டார். அதன்படி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான மக்கள் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த புதிய அமைச்சரவையானது தமிழ்நாட்டின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவர்களின் கலவையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இணையவுள்ளதாக மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், அவினாசி எம்.எல்.ஏ. கமலி.எஸ், குமாரபாளையம் எம்.எல்.ஏ. சி.விஜயலட்சுமி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ பி.விஸ்வநாதன் உள்ளிட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். இவர்களுடன் ஆர்.வி.ரஞ்சித்குமார், வினோத், ராஜீவ், பி.ராஜ்குமார், வி.காந்திராஜ், பி.மதன் ராஜா, கே.ஜெகதீஸ்வரி, எம்.விஜய் பாலாஜி, டி.லோகேஷ் தமிழ்செல்வன், ஏ.விஜய் தமிழன் பார்த்திபன், ஆர்.குமார், கே.தென்னரசு, வி.சம்பத்குமார், ஜெ.முகமது பர்வாஸ், டி.சரத்குமார், என்.மரிய வில்சன், கே.விக்னேஷ் ஆகியோரும் இந்த புதிய பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Also Read: Tamil Nadu Ministers Cabinet Expansion Full List : தமிழக அமைச்சரவையில் புதியதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்கள்.. யார் யார்.. பட்டியல் இதோ!

பெண் அமைச்சர்கள் எத்தனை பேர்?

தமிழகத்தின் புதிய விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதற்கட்ட அமைச்சரவையில் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி எஸ். கீர்த்தனா தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த நிலையில், இன்று நடைபெறும் விரிவாக்கத்தில் மேலும் 3 பெண் எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக இணைகிறார்கள். அதன்படி அவினாசி தொகுதி எம்.எல்.ஏ. கமலி.எஸ், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயலட்சுமி மற்றும் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஜெகதீஸ்வரி ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது பெண் அரசியல் அதிகாரவல்லமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்துள்ளது.

Follow Us