28 வயதில் அமைச்சர்.. எளிய குடும்ப பின்னணி.. அவினாசி தொகுதி எம்எல்ஏ கமலியின் பின்னணி என்ன!
Avinashi MLA Kamali Took Oath Minister: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் தனது 28- ஆவது வயதில் அமைச்சராக பதவி ஏற்ற அவினாசி தொகுதி எம்எல்ஏ கமலி என்பவர் யார்.. அவர் குறித்த பின்னணியை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழக கூட்டணி அமைச்சரவை விரிவாக்கம் இன்று வியாழக்கிழமை ( மே 21- ஆம் தேதி) தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில், 23 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதில், இளம் வயது அமைச்சராக அவிநாசி தொகுதி பெண் எம்எல்ஏவான கமலி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவரது வயது 28- ஆகும். இவர் யார்… இவரது பின்னணி என்ன… என்பது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் தான் அமைச்சரான கமலி. இவர் குருசாமிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்வியியல் கல்லூரியில் பி டெக் பயின்று உள்ளார். அத்துடன், ராசிபுரம் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆங்கில பட்டமும் பெற்றுள்ளார். இவரது கணவர் அந்த பகுதியில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
எளிமையான குடும்ப பின்னணி கொண்டவர் கமலி
மொத்தத்தில் கமலியின் குடும்பம் எளிமையான பின்னணியை கொண்டதாகவும். இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவரும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. முதல் முறையாக அரசியலில் ஈடுபட்ட கமலிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாய்ப்பு அளித்தார். அதை சாதகமாக பயன்படுத்திய கமலி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவிநாசி தொகுதியில் களமிறங்கினார். அப்போது, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மத்திய பாஜக அமைச்சர் எல். முருகனை 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தார்.
மேலும் படிக்க: Tamil Nadu Ministers List: இளம் வயது அமைச்சர்கள்.. கவனிக்க வைத்த தமிழ்நாடு அமைச்சரவை.. யார் யார்?
மக்கள் அளித்த வாய்ப்பின் அடிப்படையில் வெற்றி
இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில், பலர் மத்திய அமைச்சரை தோற்கடித்து விட்டேன் என்று கூறினார்கள். அவரை தோற்கடித்துவிட்டேன் என்பதை தாண்டி என்னைப் பொறுத்தவரை அது ஒரு வாய்ப்பு ஆகும். மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு அளிப்பார்கள். ஆனால், இந்த முறை மத்திய அமைச்சருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு மாறாக எனக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான கமலி சாதாரண பின்னணியை கொண்டவர் ஆவார்.
பெண்கள் பொது வாழ்வுக்கு வருவதற்கு பாராட்டு
இவர், முதல் முறையாக அரசியலில் ஈடுபட்டதும், அமைச்சரவையில் பங்கேற்றதும் பலரும் பாராட்டி வருகின்றனர் இதிலும் பெண்கள் பொது வாழ்விற்கு வருவது மிகவும் ஆரோக்கியமானதாகவும் பாராட்டப்படுகிறது. இது மட்டும் இன்றி பட்டியலினத்தை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும், 4 பெண்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அதிக அளவிலான இளைஞர்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Ministers List : பெண் அமைச்சர்கள் எத்தனை பேர்?தமிழ்நாடு அமைச்சரவை முழு பார்வை!