லஞ்ச ஒழிப்பு துறையில் லஞ்ச கூத்து.. புகாரை விசாரிக்க சென்ற இடத்தில் லஞ்சம்.. சென்னை பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
Chennai Inspector Suspended: லஞ்சம் கேட்டதாக வருவாய் அதிகாரி மீது எழுந்த புகாரை விசாரிக்க சென்ற பெண் காவல் ஆய்வாளர் விமலா லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட புகார் உண்மை என தெரியவந்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்து கூடுதல் டிஜிபி அருண் உத்தரவிட்டார்.
சென்னையை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல் ஆய்வாளர் விமலா நியமனம் செய்யப்பட்டார். அதன்படி, ஊழல் தடுப்பு போலீஸ்சாருடன் இணைந்து இன்ஸ்பெக்டர் விமலா புகாருக்குள்ளான வருவாய் அதிகாரியை விசாரணை நடத்துவதற்காக சென்றார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த போது, வருவாய் அதிகாரியிடம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று ஆய்வாளர் விமலா கூறியதாக தெரிகிறது. மேலும், தனக்கு லஞ்சம் தரவில்லை என்றால் உங்களை கைது செய்து விடுவேன் என்றும் வருவாய் அதிகாரியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
லஞ்ச புகார் குறித்து விசாரிக்க உத்தரவு
லஞ்சம் கேட்டதாக வருவாய்த்துறை அதிகாரி மீது எழுந்த புகாரை விசாரிக்க சென்ற பெண் ஆய்வாளர் அந்த அதிகாரியிடம் லஞ்சம் கேட்ட சம்பவம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனர் கூடுதல் டிஜிபி- ஆன அருண் கவனத்துக்கு சென்றது. அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு கூடுதல் டிஜிபி அருண் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!




லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
அதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஐஜி துரை குமார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில், காவல் ஆய்வாளர் விமலா மீது வைக்கப்பட்ட லஞ்ச புகார் உண்மை என்று கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிக்கை தயார் செய்து கூடுதல் டிஜிபி அருணுக்கு அனுப்பி வைத்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் விமலாவை பணியிடை நீக்கம் செய்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனரான கூடுதல் டிஜிபி ஆறும் உத்தரவு பிறப்பித்தார்.
துணை காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்
மேலும், காவல் ஆய்வாளர் விமலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் ஊழல் தடுப்பு பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கூடுதல் டிஜிபி அருண் வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: சட்டம் – ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பேரவையில் பேசுவாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!