தமிழக சட்டப்பேரவைக்கு 6 மாற்று தலைவர்கள் நியமனம்.. எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு.. ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!
TN Assembly Panel Chairmen: தமிழக சட்டப்பேரவைக்கு 6 மாற்று தலைவர்களை நியமனம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதில், 3 பேர் மாற்று கட்சியினர் ஆவர், இருவர் பெண்கள் ஆவர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. அதன்படி, இந்த அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 18- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், வினா, பதிலளிப்பு இருக்காது என்று பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ள நிலையில், வருகிற ஜூன் 23- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசின் சட்டப்பேரவை தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் இருந்து வருகிறார். துணை சட்டப்பேரவை தலைவராக ரவிசங்கர் இருந்து வருகிறார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு மாற்று தலைவர்களாக 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களான சரவணன், சத்யபாமா, மதார் பதுருதீன், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த பாட்ஷா முத்துராமலிங்கம், அதிமுகவை சேர்ந்த தளவாய் சுந்தரம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பட் ஆகிய 6 பேர் மாற்றுத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு மாற்று தலைவர்கள் அறிவிப்பு
சட்டப்பேரவையில் சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் இல்லாத நிலையில், பேரவை துணைத் தலைவர் சரவணன் பேரவையை வழிநடத்துவார். இருவரும் இல்லாத சூழ்நிலையில், மாற்று தலைவர்கள் அவையை வழி நடத்தி செல்வார்கள். இதற்காகவே, மாற்று தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார். பொதுவாக, சட்டப்பேரவை மாற்று தலைவர்களாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களே நியமனம் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
மேலும் படிக்க: சட்டம் – ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பேரவையில் பேசுவாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!




மாற்று கட்சிகளை சேர்ந்த மூவர் நியமனம்
ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், அதிமுகவை சேர்ந்த தளவாய் சுந்தரம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பட் ஆகிய மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, நியமனம் செய்யப்பட்டுள்ள 6 மாற்றுத் தலைவர்களில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி ஆட்சி முதல் மாற்று தலைவர்கள் நியமனம் வரை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் எங்களது கட்சி மற்ற கட்சிகள் போல அல்லாமல் மாற்றுக் கட்சியாக இருக்கும் என்று தேர்தல் பிரச்சாரங்களின் போது தெரிவித்திருந்தார். அதன்படி, சட்டப்பேரவை மாற்று தலைவர்கள் நியமன விவகாரம், கூட்டணி ஆட்சி முறை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அமைச்சரவையில் மாற்றுக் கட்சியினருக்கு பதவி உள்ளிட்ட மாற்று அரசியலை முன்னெடுத்து வருவதாக கட்சியினர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!