திருச்சிராப்பள்ளி – யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை – பயணிகள் மகிழ்ச்சி
IndiGo Resumes Trichy-Jaffna Flights: திருச்சியில் இருந்து இலங்கை நாட்டின் யாழ்பாணத்திற்கு வருகிற அக்டோபர் 1 முதல் இண்டிகோ விமானம் இயக்கப்படவுள்ளது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படவுள்ள நிலையில் இந்தியா - இலங்கை இடையிலான உறவே மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி, செப்டம்பர் 15 : கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு திருச்சியில் இருந்து இலங்கை நாட்டின் யாழ்பாணத்திற்கு வருகிற அக்டோபர் 1 முதல் இண்டிகோ விமானம் இயக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் சோழர் காலத்தில் இருந்து நீண்ட நெடிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை வருகிற அக்டோபர் 1 முதல் மீண்டும் செயல்படவுள்ளது.
திருச்சிராப்பள்ளி – யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை
கிட்டத்தட்ட 3 மாத இடைவெளிக்குப் பிறகு, திருச்சி மற்றும் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் அக்டோபர் 1, 2026 முதல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய வாரத்தில் 2 நாட்கள் விமான சேவை இயக்கப்படவுள்ளது. கிட்டத்தட்ட 45 முதல் 50 நிமிடங்களில் திருச்சியில் இருந்து யாழ்பாணம் சென்றடைய முடியும்.
இதையும் படிக்க : மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறு.. டாஸ்மாக் கடை வாசலில் இளைஞரை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்..




இதற்காக விமான டிக்கெட் முன்பதிவு மற்றும் இந்தியா விசா சேவைகளுக்கான ஏற்பாடுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இந்த சேவை தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி வழியாக பிற சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கும் ஒரு முக்கிய இணைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா செல்பவர்கள், அங்கிருந்து மன்னர் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் பயணித்த வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளை நோக்கித் தங்கள் ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பயணத்தைத் தொடங்கலாம். குறிப்பாக யாழ்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் பண்பாட்டு சின்னமாகவும் ஆன்மீக மையமாகவும் விளங்குகிறது.
மேலும் தொன்மையான கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் யாழ்பாணக்கோட்டை உள்ளிட்டவற்றை பார்வையிட முடியும். யாழ்ப்பாணத்தில் தொடங்கி தெற்கு நோக்கி பயணித்து வரலாற்றுத் தலைநகரான அனுராதபுரம் வரை செல்வது ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது. முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றி அனுராதபுரத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த வரலாற்றுச் சான்றுகள் இங்குள்ள தொல்பொருள் சின்னங்களில் காணப்படுகின்றன.
இதையும் படிக்க : மின்சார துறையில் வரும் முக்கிய மாற்றம்.. முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..
அனுராதபுரத்தில் உள்ள தொன்மையான தூபிகள், கலை வேலைப்பாடுகள் மற்றும் சோழர்களால் கட்டப்பட்ட சிவனாலயங்களின் இடிபாடுகள் தமிழர்களின் தொன்மை வரலாற்றுக்குச் சான்றாக நிற்கின்றன. இதனையடுத்து இந்த புதிய விமான சேவை இந்தியா – இலங்கை இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நகர்வாக பார்க்கப்படுகிறது.